“முதல்வருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது” - அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

cm-hospital-duraimurugan

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வழக்கமாக மேற்கொள்ளும் நடைப்பயிற்சியில் கடந்த 21ஆம் தேதி (21.07.2025) ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே கள ஆய்வு நிகழ்ச்சி, ரோடு ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிக்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்ளவிருந்த திருப்பூர் மாவட்ட பயணம் ஒத்திவைக்கப்பட்டன. 

அதே சமயம் முதல்வர் மு.க. ஸ்டாலின் 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் அறிவுறுத்தியதால் திருப்பூர் பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து தொடர்ந்து 4வது நாளாக இன்றும் (24.07.2025) முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர், அங்கிருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதோடு முக்கிய கோப்புகளை பார்வையிட்டு ஒப்புதல் அளித்தும் வருகிறார்.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் துரை முருகன் உள்ளிட்டோர் இன்று சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் முதல்வரின் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் அவர்கள் கேட்டறிந்தனர். இதனையடுத்து அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் முதல்வரின் உடல்நிலை தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “முதல்வருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. முதல்வர் நன்றாக உள்ளார். முதல்வர் எப்போது வீடு திரும்புவார் என்பது குறித்து  மருத்துவர்கள் தெரிவிப்பார்கள்” எனத் தெரிவித்தார். 

Chennai duraimurugan hospital mk stalin
இதையும் படியுங்கள்
Subscribe