/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kolathur-mks-art_0.jpg)
ரமலான் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “அறம் பிறழா மனித வாழ்வை வலியுறுத்தும் இரமலான் திருநாளைக் கொண்டாடும் இசுலாமிய சகோதர, சகோதரிகளுக்கு உளம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இசுலாமிய சமுதாய மக்கள் ஒரு மாத காலம் கடுமையாக நோன்பிருந்து பசித்துன்பம் என்பதை அனுபவத்தால் உணர்ந்து, ஏழை எளியோர் பால் இரக்கம் கொண்டு, ஈகைப் பண்பு சிறக்க இரமலான் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள்.
‘எனது கல்லறையை அலங்காரம் செய்யாதீர்கள்; என்னை இறைவனாக ஆக்கி விடாதீர்கள்; எனக்கு முன்னாள் வாழ்ந்த நபிமார்களை அப்படி ஆக்கிவிட்டார்கள்; உலர்ந்த ரொட்டித் துண்டுகளையும், காய்ந்த பேரீச்சம் பழங்களையும் உண்டு வாழ்ந்த ஓர் ஏழைப் பெண்ணின் மகன் என்று கூறுவதில் நான் பெருமையடைகிறேன்’ என்று தன் அன்பர்களுக்குக் கூறியவர் அண்ணல் நபிகள் பெருமான். பொய்மை, ஆடம்பரம் இவற்றைத் தவிர்த்து எளிமை, அன்பு, அடக்கம் இவற்றை குணநலன்களாகக்கொள்ள வழிகாட்டிய கருணை வள்ளல் அவர். பசித்தோருக்கு உணவிடவும், சமத்துவ, சகோதரத்துவ உணர்வுடன் அனைவரையும் நேசிக்கவும் வழிகாட்டிய பெருமானார்.
‘தொழிலாளரின் வியர்வை உலரும் முன் அவன் கூலியைக் கொடுத்து விடு’ என்று உழைப்பை மதித்திடும் உத்தமப் பண்பை உலகுக்கு நீதியாய் போதித்தவர். மனித வாழ்வு மேன்மை அடைவதற்கான இத்தகைய மார்க்கங்களைப் போதிப்பதால்தான் நபிகள் நாயகத்தை மக்கள் என்றும் போற்றுகிறார்கள். அத்தகைய நபிகள் பெருமகனார் போதித்த நெறியில் வாழ்ந்து, நோன்புக் கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு, இரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இசுலாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் திமுகவின் தலைவர் என்ற முறையிலும், முதலமைச்சர் என்ற பொறுப்பிலும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)