தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாகச் சேலத்திற்கு நேற்று (11.06.2025) மாலை வருகை தந்திருந்தார். முன்னதாக ஈரோடு - சேலம் மாவட்ட எல்லையான பவானி - மேட்டூர் பெரும்பள்ளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து நவப்பட்டியில் உள்ள நீர்வளத்துறை ஆய்வு மாளிகை வரை 11 கி.மீ. தூரம் வாகனத்தில் பயணித்தபடியும், சாலையில் நடந்தும் பொதுமக்களை (ரோடு ஷோ) சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர் முத்துசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Advertisment

அதே சமயம் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குச் சாலையின் இருபுறமும் இருந்த திமுகவினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ரோடு ஷோவின் போது அவர் மக்கள் கூட்டத்தைப் பார்த்ததும் வாகனத்தை விட்டு இறங்கினார். அச்சமயத்தில் அங்கிருந்த திமுக தொண்டர்கள், பொதுமக்களிடம் சென்று பேசினார். சிறிது தூரம் நடந்து சென்று மக்களின் வரவேற்பைப் பெற்றுக்கொண்டார். அங்கிருந்தவர்களிடம் கை குலுக்கி வணக்கம் தெரிவித்தார். மேலும் குழந்தைகள், பெரியவர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அதே போன்று பொதுமக்களும் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். பொதுமக்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றுக்கொண்டார். அங்கிருந்த குழந்தைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் தூக்கிக் கொஞ்சினார்.

Advertisment