CM MK Stalin gave happy news to women police

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் காவல்துறை சார்பில் இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா இன்று (23.08.2024) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 158 காவலர்களுக்கு மத்திய அரசு பதக்கங்களும், 301 காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கங்களையும் வழங்கினார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “காவல்துறையில் முதன்முதலாக மகளிரை இடம்பெறச் செய்தது கலைஞர் தான். இன்று எனக்கு அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதை கமாண்டராக ஒரு பெண் அதிகாரி இருந்து எனக்கு மிகவும் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. மகளிர் பொன்விழா ஆண்டான இப்போது, மகளிர் காவலர்களிடையே நீண்ட நாட்களாக இருக்கும் ஒரு கோரிக்கையை மிகுந்த மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும், இந்த நிகழ்ச்சியில் அறிவிப்பாக வெளியிட விரும்புகிறேன்.

Advertisment

CM MK Stalin gave happy news to women police

தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை முடிந்து அவர்கள் பணிக்குத் திரும்பும்போது அவர்கள் குழந்தைகளைப் பராமரிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுவது தொடர்பாகத் தொடர்ந்து அவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அவர்கள் கோரிக்கையை ஏற்று, மகப்பேறு விடுமுறையில் இருந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்களுக்கு அவர்கள் பணிமூப்புக்கு விலக்களித்து அவர்களுடைய பெற்றோர்களோ அல்லது கணவர் வீட்டைச் சார்ந்தவர்களோ வசிக்கும் மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பணிமாறுதல் வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதிக்கும் குற்றச்செயல் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் பெண் காவலர்கள் மிக முக்கிய பங்காற்றுகிறார்கள். எனவே, இப்படிப்பட்ட குற்றங்களைக் கையாளுவதில் பெண் காவலர்களின் தொழில்முறைத் திறன்களை மேலும் மேம்படுத்தும் வகையில், பெண் கடத்தல் குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பதற்கு அவர்களுக்குச் சிறப்புத் திறன் பயிற்சி அளிக்கப்படும்.

Advertisment

CM MK Stalin gave happy news to women police

காவலர்களுக்கு இருக்கும் கடமையும், பொறுப்பும் மிக மிகப் பெரியது. மக்களைக் காப்பாற்றுவது காவலர்களின் கடமை. மக்களைப் பாதுகாப்பது காவலர்களின் பொறுப்பு. அதை எந்தக் குறையும் இல்லாமல் நிறைவேற்றித் தாருங்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். குற்றங்களைக் குறைக்கும் துறையாக மட்டும் இல்லாமல், குற்றங்கள் நடப்பதற்கு முன்பே தடுக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறேன். குற்றங்கள் நடக்காத மாநிலமாகப் போதைப் பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக பாலியல் குற்றம் இல்லாத மாநிலமாக, நம்முடைய மாநிலம் உருவாக வேண்டும். குற்றங்கள் எங்கேயும் யாராலும் நடக்கக் கூடாது. மீறி நடந்தால், உடனடியாக குற்றவாளி கைது செய்யப்பட்டாக வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு விரைவாகத் தண்டனையைப் பெற்றுத் தந்தாக வேண்டும்.

இந்த உறுதிமொழியை நான் மட்டும் எடுத்தால் போதாது உயரதிகாரிகள் மட்டும் எடுத்தால் போதாது காவல்துறையின் ஒவ்வொரு காவலரும் எடுத்தாக வேண்டும். “என்னுடைய காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் எந்த வகைப்பட்ட குற்றமும் நடக்கவில்லை நடக்க விடமாட்டேன்” என்று ஒரு காவலர் முடிவெடுத்துவிட்டால் குற்றங்கள் பூஜ்ஜியத்திற்கு வந்துவிடும். மனித வளர்ச்சியின் அனைத்துக் குறியீடுகளிலும் முன்னணி மாநிலமாக இருக்கும் தமிழ்நாடு குற்றச் சம்பவங்களில் பூஜ்ஜியமாக இருந்தால்தான், நமக்கெல்லாம் பெருமை. இதில் பூஜ்ஜியம் வாங்க 100 விழுக்காடு அர்ப்பணிப்புடன், அனைத்துக் காவலர்களும் பணியாற்ற வேண்டும் என்று கேட்டு, விருது பெற்ற அனைவரையும் பாராட்டி, மகிழ்ந்து விடைபெறுகிறேன்” எனத் தெரிவித்தார்.