/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/diwali-art_1.jpg)
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (31.10.2024) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 1ஆம் தேதி அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கிடையே தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும் டாஸ்மார்க் ஊழியர்களுக்குத் தீபாவளிக்கான போனஸ் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதே சமயம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் செயல்படும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (30.10.2024) பிற்பகல் முதல் என அரைநாள் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள் நாளை முற்பகல் மட்டும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm-dipr-art_9.jpg)
இந்நிலையில் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி நீலகிரி மாவட்டத்தின் வனப் பகுதிகள் மற்றும் பிற பொருத்தமான பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலைவாய்ப்பு அளிப்பதை நோக்கமாகக்கொண்டு, தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகமானது (TANTEA) 1976ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடிக்கிடையிலும், 1093 ஓய்வுபெற்ற தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு பணிக்கொடை மற்றும் ஓய்வூதியப் பணப்பலன்களை வழங்கும்பொருட்டு ரூ.29.38 கோடியினை வழங்கியது, ஓய்வு பெற்ற தேயிலை தோட்ட கழக தொழிலாளர்கள் வசிக்க ஏதுவாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வி மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கான பயனாளிகளின் பங்களிப்பிற்கு என ரூ.13.46 கோடி வழங்கியது. தேயிலை தோட்டக் கழக தொழிலாளர்களின் தினக்கூலியை ரூ.438 ஆக உயர்த்தி ஆணையிட்டது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக ஊழியர் நலன் காக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்து வருகிறார்.
இந்த ஆண்டு போனஸ் வழங்க அரசு வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் படி நட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக பணியாளர்கள் 10% போனஸ் மட்டுமே பெற தகுதியானவர்கள். சுற்றுசூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு இரப்பர் கழகம் மற்றும் தமிழ்நாடு வனத்தோட்டக் கழக பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படுகிறது. வனத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிறுவன பணியாளர்களுக்கும் ஒரே அளவில் 20% போனஸ் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக பணியாளர்களுக்கும் ரூ.5.72 கோடி செலவில் 20% போனஸ் வழங்கப்படும். இதனால் 3939 பணியாளர்கள் பயன் பெறுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டேன்டீ தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)