நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர், போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் மரியா கிளிட் அகியோர் அடங்கிய அமர்வில் இன்று (01.07.2025) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “இந்த வழக்கில் மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் பால் சுரேஷ் நீதி விசாரணை நடத்த வேண்டும். இதற்காகத் திருப்புவனம் காவல் ஆய்வாளர், சப் இன்ஸ்பெக்டர், மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டவர்கள் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும். காலம் காலம் செல்லச் சொல்ல நாட்கள் ஆக ஆகச் சாட்சியங்கள் அழிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த சம்பவம் நடந்த இடங்கள் ஏற்கனவே பாதுகாக்கப்படாமல் உள்ளது. எனவே இது போன்ற செயல்கள் மேற்கொண்டு இந்த வழக்கைப் பலமிழக்க, வலுவிழக்கச் செய்யும்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கை வரும் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த அஜித்குமாரின் வீட்டிற்குத் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சித் தலைவர் பொற்கொடியும் மற்றும் வட்டாட்சியர் விஜய்குமார் ஆகியோர் நேரில் வருகை தந்து அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் மற்றும் அவரது தாயார் மாலதியை நேரில் சந்தித்து அமைச்சர் பெரிய கருப்பன் ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவர், “நவீன்குமாருக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து தரப்படும். அரசின் நிவாரணங்கள் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்” என உறுதியளித்தார். அதே சமயம் அஜித்குமாரின் குடும்பத்தினருக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைப்பேசி மூலமாகத் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தது குறித்து தாயார் அஜித்குமாரின் மாலதி பேசுகையில், “என் பையனுக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் இந்த மாதிரி பண்ணிட்டாங்க என்று சொன்னேன். ரொம்ப கஷ்டப்பட்டு என் பிள்ளையை வளர்த்தேன். இதற்கு நல்ல நீதி கிடைக்க வேண்டும் என்று சொன்னேன். அதற்கு முதல்வர் ரொம்ப வருத்தமாகத் தான் இருக்கிறது. மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள். ரொம்ப கவலையாக இருக்கிறது என்று சொன்னார். முதல்வர் பேசியது கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருக்கிறது” எனத் தெரிவித்தார்.