தமிழகத்தில் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவிவருகிறது. இதனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் கரோனா பாதிப்பும், படுக்கைகள் கிடைக்காமல் தொற்று பாதித்தவர்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், இன்று சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பரவலை சமாளிக்க பல்வேறு திட்டங்களை செயல்பாட்டுக் கொண்டுவர முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார்.
சேலத்தில் மருத்துவமனைக்கு செல்வதற்காக மூதாட்டி ஒருவர் தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவர் திடீரென மயங்கி சாலையில் விழுந்துள்ளார். அவருக்கு கரோனா தொற்று இருக்குமோ என அஞ்சி யாரும் அம்மூதாட்டிக்கு உதவி செய்ய முன்வரவில்லை. அப்போது அவ்வழியாக சென்ற இளையராணி என்கிற இளம்பெண் அம்மூதாட்டியை மீட்டு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார்.
இது சமூக வலைதளங்களில் அதிகமாக பகீரப்பட்டு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்துவந்தனர். இந்நிலையில், இன்று சேலம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்த இளம்பெண்ணின்செயலை அறிந்து அவரை நேரில் அழைத்து பாராட்டினார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்த மூதாட்டிக்கு கரோனா அச்சம் காரணமாக யாருமே உதவ முன்வராத நிலையில் இளையராணி என்ற இளம்பெண் மனிதநேயத்துடன் உதவியதை அறிந்து நெகிழ்ந்து போனேன்.
இன்று சேலம் சென்றிருந்த போது இளையராணியை சந்தித்து மனமார பாராட்டினேன். இளைய தலைமுறை நம்பிக்கையூட்டுகிறது!” என்று பதிவிட்டுள்ளார்.