
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் பாகலூர் அருகே எழுவப்பள்ளி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 30 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில் 3ஆம் வகுப்பு படித்து வந்த மணிகண்டன் என்பவரது மகன் நித்தின் (வயது 8) என்ற மாணவரும் ஒருவர் ஆவார். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராகக் கௌரி சங்கர் (வயது 53) என்பவர் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் மாணவர் நித்தின் இன்று (05.03.2025) மதிய உணவு இடைவெளியின் போது மதியம் 01.30 மணியளவில் பள்ளியின் பின்புறம் 100 மீட்டர் தொலைவில் உள்ள தனியாருக்குச் சொந்தமான விவசாய தோட்டத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த விவசாய தோட்ட நீர் சேமிப்புத் தொட்டியில் (செயற்கை குட்டை) நிதின் விழுந்துள்ளார். உடனடியாக இதனைக் கவனித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கௌரிசங்கர் மாணவனைக் காப்பாற்ற நீர் சேமிப்புத் தொட்டியில் இறங்கியுள்ளார். இருப்பினும் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பாகலூர் போலீசார் விரைந்து வந்தனர். அதன் பின்னர் இருவரின் சடலத்தையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவர், தலைமை ஆசிரியர் என இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த பள்ளி மாணவன் நித்தின் மற்றும் தலைமையாசிரியர் கெளரிசங்கர் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இச்சம்பவத்தில்,உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு, உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.