
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டத்திற்கு உட்பட்டது வெள்ளாள விடுதி வருவாய் கிராமம். இந்த கிராமத்தில் அரசு விதைப் பண்ணை அமைந்துள்ளது. இங்குச் சங்கம் விடுதி கிராமம், குருவாண்டான் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் மனைவி ஜெயலலிதா கடந்த 21ஆம் தேதி (21.2.2025)அன்று வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக உளுந்து அடிக்கும் இயந்திரத்தில் அவரது சேலை சுற்றி தலையின் பின்புறத்தில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் நேற்று (26.2.2025) பிற்பகல் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். அரசு விதைப் பண்ணையில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி பெண் பணியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவியை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அரசு விதைப் பண்ணையில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி ஜெயலலிதா உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு, அவரது குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.