
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரை அடுத்துள்ளது அரசூர் கிராமம். இப்பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் கிளை ஆறான மலட்டாறு செல்கிறது. அந்த பகுதியில் கனமழை பெய்த நிலையில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாரதி நகர்ப் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரின் மகள்களான் அபிநயா (வயது 14) மற்றும் சிவசங்கரி (வயது 18), ராஜேந்திரன் என்பவரின் மகன் ராஜேஷ் (வயது 13) ஆகியோர் நேற்று (21.05.2025) காலை ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது ஆற்றில் ஆழமான பகுதிக்குச் சென்றதால் மூவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.
இதனைக் கண்டு அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அங்கு விரைந்து வந்த திருவெண்ணைநல்லூர் தீயணைப்புப் படையினர் 3 பேரின் சடலங்களையும் மீட்டனர். இதனையடுத்து மூவரின் உடலும் உடலானது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. நீரில் மூழ்கி 3 பேர் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அதோடு நிதியுதவியையும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இச்சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ள்ளார்.