/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tiruttani-bus-lorry-art_0.jpg)
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், பீரகுப்பம் மதுரா கே.ஜி. கண்டிகை கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டத்திற்கு உட்பட்டது பீரகுப்பம் மதுரா கே.ஜி.கண்டிகை கிராமம். இந்த கிராமத்தில் இன்று (07.03.2025) பிற்பகல் 03.30 மணியளவில் திருத்தணியில் இருந்து சோளிங்கர் நோக்கிச் டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது.
அதே சமயம் ஆர்.கே. பேட்டையில் இருந்து திருத்தணி நோக்கிச் அரசுப் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கிய பேருந்தில் பயணம் செய்த திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டம், அம்மையார் குப்பத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் (வயது 60), சிவானந்தம் (வயது 53), மகேஷ் (வயது 40) மற்றும் முரளி (வயது 38) ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் 28 நபர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)