
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனையடுத்து தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இப்பேரிடரிலிருந்து மக்களை மீட்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் விசிக சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கென ரூ. 10 பத்து லட்சம் வழங்கிட விசிக உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதாவது விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் தலா ஒரு மாத சம்பளத்தையும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா இரண்டு மாத சம்பளத்தையும் கொண்டு இந்நிதி முதலமைச்சரிடம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, வி.சி.க. தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் இன்று (09.12.2024) சந்தித்துப் பேசினார். அப்போது, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிட அக்கட்சியின் சார்பில் ரூ. 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் து. ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனைச்செல்வன், எம். பாபு, எஸ்.எஸ்.பாலாஜி, ஜெ. முகம்மது ஷா நவாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக, விசிக துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம் சார்பில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த 6 ஆம் தேதி (06.12.2024) சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. த.வெ.க. தலைவர் விஜய் இந்நூலை வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். எனவே மன்னராட்சியை ஒழிக்க வேண்டிய நேரம் இது” எனப் பேசியிருந்தார். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து ஆதவ் அர்ஜூனா விசிகவிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.