தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதாவது ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த போது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ வேகத்தைத் தொட்டது. இதனால் சாலைகள் மற்றும் மின் இணைப்புகள் கடுமையாகச் சேதமடைந்தன.
மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட உள் மாவட்டங்களில் கனமழையால் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் புயல் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, பெரும்பாலான பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. அதோடு, பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களை இடம்பெயரச் செய்துள்ளது. அதோடு உள்கட்டமைப்பு மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரிடரால் மொத்தம் 69 லட்சம் குடும்பங்களும், 1.5 கோடி மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்டுள்ள கடுமையான மற்றும் வரலாறு காணாத சேதங்களைக் கருத்தில் கொண்டு, உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரத்தைத் தற்காலிகமாகச் சீரமைக்க 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியினை விடுவித்திடக் கோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி வாயிலாகக் கேட்டறிந்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது தமிழகத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும், ஆதரவையும் மத்திய அரசு வழங்கும் என முதலமைச்சரிடம் பிரதமர் உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்புகொண்டு கேட்டறிந்தார். மாநில அரசு பேரிடர் பாதிப்பைத் திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் பிரதமரிடம் தெரிவித்தேன். அதோடு தமிழ்நாட்டு மக்களைக் கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்தப் புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி, புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள மத்தியக் குழுவை அனுப்பிட வேண்டும் என்ற எனது கடிதத்தைக் குறிப்பிட்டு, இது குறித்து மீண்டும் வலியுறுத்தினேன். தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையைப் பிரதமர் மோடி உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிப்பட நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.