ஊட்டியில் 5 நாட்கள் நடைபெறவுள்ள மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஊட்டியில் அமைந்துள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 124ஆவது மலர்க்கண்காட்சி இன்று காலை துவங்கியது. மொத்தம் 5 நாட்களுக்கு இந்தக் கண்காட்சியானது நடைபெறுகிறது. ஒரு லட்சம் மலர்களைக் கொண்டு 80 அடி நீளமும் 20 அடி உயரமும் கொண்ட கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் முகப்பு, கண்காட்சி வளாகத்தினுள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 124ஆவது மலர்க்கண்காட்சி என்ற வாசகம் பிரமாண்டமான முறையில் மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 275 ரகங்களில் 5.5 லட்சம் மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு, தமிழக அரசு முன்னெடுத்த மஞ்சப்பை திட்டம் குறித்து மலர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.