CM Edappadi palanisamy condolence Dr Santha

Advertisment

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா(93) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

சென்னை அடையாறு மருத்துவமனை தலைவர் சாந்தா, அப்போலோ மருத்துவமனையில் இதயநோய் சம்பந்தமாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று (19 ஜன.) காலை காலமானார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளாக இல்லத்தில் மருத்துவர் சாந்தாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மருத்துவர் சாந்தாவின் இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் சாந்தாவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவரும், உலகப் புகழ்பெற்ற புற்றுநோய் நிபுணருமான மருத்துவர் வி.சாந்தா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன்.

Advertisment

மருத்துவர் சாந்தா அவர்கள், 1955-ம் ஆண்டில் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் பணியில் சேர்ந்து பல்வேறு முக்கிய பதவிகளில் பணியாற்றியவர். இவர் தனது தன்னலமற்ற சேவையின் மூலம் பல்வேறு தரப்பினரின் ஆதரவினை பெற்று 12 படுக்கைகளுடன் துவங்கப்பட்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை மேம்படுத்தி, நவீன வசதிகளைக் கொண்டுவந்து, புற்றுநோயால் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக உயர்தர சிகிச்சை அளித்தவர் என்ற பெருமைக்குரியவர்.

“நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்

வாய் நாடி வாய்ப்பச் செயல்” - என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க மருத்துவர் சாந்தா அவர்கள் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என அடிக்கடி பரிசோதனைகள் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். இவரது மருத்துவ சேவைப் பணிகள் உலக அளவில் பெரிதும் போற்றிப் பாராட்டப்பட்டது.

மருத்துவர் சாந்தா அவர்களின் மறைவு மருத்துவத் துறைக்கும், தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய இழப்பாகும். இவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. அவர் மறைந்தாலும், அவரது சிகிச்சை முறைகள் அனைத்து தரப்பு மக்களிடத்திலும் நிலைத்து, அன்னாரது நினைவைப் போற்றிக் கொண்டிருக்கும்.

Advertisment

மருத்துவர் சாந்தா அவர்களை இழந்து வாடும் சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்த மருத்துவர் சாந்தா அவர்களின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையிலும், அன்னாரின் தன்னலமற்ற சேவையினை கௌரவிக்கும் விதமாகவும் அன்னாரின் இறுதி சடங்குகளின்போது காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய நான் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.