Skip to main content

“மக்களின் நலனுக்காக தொடர்ந்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் முதல்வர்” - அமைச்சர் ஐ. பெரியசாமி

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
CM is constantly implementing projects for the benefit of the people says I. Periyasamy

திண்டுக்கல் மாவட்டத்தில் தாடிக் கொம்பு மற்றும் அகரம் பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.16.46 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அடிக்கல் நாட்டி, ரூ.38.13 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார். இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமை தாங்கினார். அகரம் பேரூராட்சி தலைவர் நந்தகோபால், தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் கவிதா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேசும்போது, “தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை கடைக் கோடி மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார். பொதுமக்களுக்குத் தேவையான கல்வி, குடிநீர் வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் வாயிலாக சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாடிக்கொம்பு பேரூராட்சி, ஆத்துப்பட்டி  பகுதிகளில் எஸ்.சி.பி.ஏ.ஆர்(SCPAR) திட்டத்தின் கீழ் குடகனாற்றின் குறுக்கே ரூ.7.28 கோடி மதிப்பீட்டில் புதிதாக உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள், அகரம் பேரூராட்சிக்குட்பட்ட லட்சுமணம்பட்டி காலனியில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.49.00 இலட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள், காளணம்பட்டியில் பொதுநிதியின் கீழ் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக வண்ணக்கல் பதிக்கும் பணிகள், உலகம்பட்டியில் 15வது நிதிக்குழு மானியத்தில் ரூ.18.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக வண்ணக்கல் பதிக்கும் பணிகள், அகரம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்குடை, கஸ்தூரி புரத்தில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் வடிகாலுடன் கூடிய வண்ணக்கல் பதிக்கும் பணிகள், மாங்கரையில் மாங்கரையாற்றின் குறுக்கே ரூ.3.55 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணிகள், பழைய முத்தனம்பட்டியில் மாங்கரையாற்றின் குறுக்கே ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணிகள், தாடிக் கொம்பு பேரூராட்சி பாறையூரில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள், மறவப்பட்டியில் சர்ச் முன்புறம் பாராளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.22.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக வண்ணக்கல் பதிக்கும் பணிகள் என ரூ.16.46 கோடி மதிப்பீட்டில் பல்வேறு இடங்களில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 

மேலும், அகரம் பேரூராட்சி சுக்காம்பட்டியில் கூட்டுறவுத்துறையின் சார்பில் கட்டப்பட்ட வணிக வளாக கட்டடம், பாப்பனம்பட்டியில் அமைச்சரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நாடகமேடை மற்றும் ரூ.9.13 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை கட்டடம், கோட்டூர் ஆவரம்பட்டியில் அமைச்சரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக்கடை கட்டடம், தாடிக்கொம்பில்  அமைச்சரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நாடகமேடை என மொத்தம் ரூ.38.13 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன. 

ஆத்தூர், ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், திண்டுக்கல் பகுதிகளுக்கு தனித்தனியாக குடிநீர் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு சுமார் ரூ.2,000 கோடி அளவிற்கு குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். மேலும், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்கும் பணிகள் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன. கலைஞரால் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டு இன்றுவரை திறம்பட செயல்பட்டு வருகின்றன. அவருடைய ஆட்சி காலத்தில் மகளிர் முன்னேற்றத்திற்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. 

அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் தகுதியுள்ள நபர்கள் விடுபட்டிருந்தால் அவர்கள், மேல்முறையீடு செய்தால், அந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அவர்களுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக மக்களின் நலனுக்காக ஏராளமான திட்டங்களை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வரும் இந்த அரசுக்கு பொதுமக்கள் என்றென்றும் ஆதரவு அளிக்க வேண்டும்” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்