Skip to main content

''மக்களின் முடிவை முதல்வர் அறிவித்துள்ளார்''- த.மா.கா. யுவராஜ்

Published on 09/06/2020 | Edited on 09/06/2020
CM announces people's decision ... tmc Yuvraj


"நோய்த் தொற்றின் தற்போதைய போக்கை கருத்தில் கொண்டு மாணவர்களை நோய்த் தொற்றில் இருந்துகாக்க வரும் 15ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளும், 11 ஆம்வகுப்புக்கான விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என்ற தமிழக முதல்வர் அவர்களின் இந்த அறிவிப்பு மிகவும் வரவேற்கக்கூடிய ஒன்றாகும்." என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் ஈரோடு யுவராஜா கூறியுள்ளார். மேலும் அவரது அறிக்கையில்,


"தமிழக மாணவர்கள் 2019 - 2020 ஆம் கல்வி ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு பாடங்கள் அனைத்தையும் படித்து தேர்வுக்கு  நல்ல முறையில் தங்களை தயார்படுத்தியிருந்தனர், இந்த நிலையில் கரோனா நோய் தொற்றின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட  ஊரடங்கினால் தேர்வு நடத்த இயலாமல் போனதே தவிர, தேர்வு எழுத முடியாததால் ஒட்டுமொத்த  மாணவர்களின் கல்வித்திறன் குறைந்துவிடாது, எனவே, இந்த தேர்வுகள் ரத்துசெய்யப்பட்ட  காரணத்தால் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு முடிவுகள் மற்றும் வருகை பதிவு ஆகியவற்றின்அடிப்படையில் மேல் வகுப்புக்கு தேர்ச்சிசெய்யப்படுவர்.

 

 


மேலும் மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு, காலாண்டு மற்றும்அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதமும், மாணவர்களின் வருகைப்பதிவு அடிப்படையில் 20% மதிப்பெண்களும் கணக்கிடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். எனவே, மேல்நிலை வகுப்பு மாணவர் சேர்க்கையில்  எந்த குழப்பமும் ஏற்படாது. மாணவர்கள் அனைவரும்  தங்களது வீடுகளை விட்டு வராமல், உடல்நலனை  பார்த்து கொள்ளவேண்டும். இனிவரும் வகுப்புகளில் மாணவர்கள் நன்கு படித்து, தங்களை வளர்த்து கொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்த தமிழகமும் எடுத்த முடிவைத்தான் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் இதை தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் சார்பாக மனதார வரவேற்கிறோம்." என கூறியிருக்கிறார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

“தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும்” - த.மா.கா கோரிக்கை

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
TMc demand Election rules should be relaxed

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முழுமையாக முடிவடைந்த மாநிலங்களிலும், விரைவில் தேர்தல் முடியும் மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகளை (எம்சிசி) தளர்த்த வேண்டும் என  தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் ஈரோடு யுவராஜா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி மற்றும் சிறிய மாநிலங்களில் தேர்தல் முழுமையாக நிறைவடைந்துள்ளது. முதல் கட்டத்துக்குப் பிறகு, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் அடுத்த கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். 543 மக்களவைத் தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாகிறது. தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, முழு முடிவும் வெளியாகும் வரை எம்.சி.சி. இருக்கும்.

எனவே, எம்சிசியை ரத்து செய்ய இன்னும் 3 முதல் 5 நாட்கள் ஆகும். அதுவரை ஒட்டுமொத்த நிர்வாகமும் முடங்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சித் தலைவர்கள், பல்வேறு அரசு, மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் நிர்வாகிகள் எந்த முடிவும் எடுக்கவோ, பொதுமக்கள் குறைகளைக் கேட்கவோ முடியவில்லை. வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு, மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், அரசு விழாக்கள், புதிய பணிகளுக்கான பூமி பூஜை, நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகள் தொடக்க விழா, புதிய அறிவிப்புகள் மற்றும் புதிய திட்டங்கள், பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் விநியோகம், பொதுமக்கள் மனுக்கள் பரிசீலனை, டெண்டர் அழைப்பு போன்றவை நடக்கவில்லை. தேர்தல் நிலுவையில் உள்ள மாநிலங்களில் MCC விதிகளை அமல்படுத்துவது நியாயமானது. ஆனால் தேர்தல் முடிந்த மாநிலங்களில் எம்சிசியை அமல்படுத்துவது நியாயமானதல்ல. எம்.சி.சி தளர்வு மற்றும் தேர்தல் முடிந்த மாநிலங்களில் இயல்பான நிர்வாகம் ஆகியவை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் செயல்முறையை பாதிக்காது, ஏனெனில் இங்கு திமுக  ஆட்சி வெளியிடும் அறிவிப்பு அண்டை மாநிலங்களின் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது.

மாநிலத்தில் 45 நாட்கள் நிர்வாகம் தேக்கம் அடைந்திருப்பது மக்களை, குறிப்பாக அரசாங்க உதவியை நாடும் ஏழை மற்றும் ஏழை மக்களைப் பாதிக்கும், மேலும் தேர்தல் ஆணையத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே, ஏப்ரல் 19ம் தேதி இரவு 7 மணிக்கும் நள்ளிரவுக்கும் அறிவிக்கப்பட்ட இறுதி வாக்குப்பதிவு சதவீதத்தில் தேர்தல் ஆணையம் செய்த குழப்பம்  மற்றும் முறையான ஆவணங்கள் இல்லை என்ற பெயரில் அப்பாவி பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பறிமுதல் செய்தது, பணம் ரூ.50000 உச்சவரம்பு நிர்ணயம் செய்வது குறித்து இங்குள்ள மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.  எனவே, மருத்துவமனை, கல்லூரி சேர்க்கை, திருமணம், சொத்துப் பதிவு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை போன்றவற்றுக்கு பணத்தை எடுத்துச் செல்வதில் தேர்தல் விதிமுறைகள்  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளன. எனவே  த.மா.கா  இளைஞர் அணி சார்பாக  தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.