Skip to main content

'கரோனாவை வெல்ல வேண்டும் என்றால் மதுக்கடைகளை மூடுங்கள்'-  ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

'Close liquor stores if you want to beat Corona' - GK Vasan insists!

 

தமிழ்நாட்டில் கரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் உயர்ந்துவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கியமாக வார இறுதி நாளும், விடுமுறை நாளுமான ஞாயிற்றுக்கிழமை அன்று முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி வரை கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை டாஸ்மாக்கில் மதுவிற்பனை களைகட்டியது.

 

கடந்த 9 ஆம் தேதி மட்டும் தமிழகத்தில் 217.96 கோடி ரூபாய் மது விற்பனை நடந்துள்ளது. அதிகபட்சமாகச் சென்னை மண்டலத்தில் 50.04 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 43.20 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடந்துள்ளது. திருச்சி மண்டலம்- 42.59 கோடி ரூபாய், சேலம் மண்டலம்- 40.85 கோடி ரூபாய், கோவை- 41.28 கோடி ரூபாய் என மது விற்பனை நடந்துள்ளது. இந்நிலையில் மதுக்கடைகளை மூட வேண்டும் என தமாகவின் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். கரோனாவை கட்டுப்படுத்தும் கோட்பாடுகள் 100 சதவிகிதம் வெற்றியடைய வேண்டும் என்றால் மதுக்கடைகளை மூட வேண்டும். தொடர் விடுமுறை காரணமாக அதிகப்படியானோர் மதுக்கடைகளில் கூடுவதற்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

'தேர்தல் பணியைவிட சிறுத்தையை பிடிப்பதே முதல் பணி'-ஜி.கே.வாசன்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
'The first task is to catch the leopard rather than the election task' - GK Vasan speech

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இரவில் நடமாடும் சிறுத்தையை பிடிக்கும் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை வேட்டையாடும் வகையில் சிறுத்தை ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சிறுத்தையின் கால்தடத்தை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

தொடர்ந்து மூன்று நாட்களாக அந்த பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் பாதுகாப்பு கருதி இன்று (04/04/2024) அந்த உள்ள 9  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

சிறுத்தை தேடுதல் வேட்டையில் முதல் நாள் கேமராவில் சிக்கிய அந்த சிறுத்தை இரண்டாவது நாள் சிக்கவில்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியநாதபுரம் பகுதியில் நேற்று இரவு வனத்துறையினர் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பின் தொடர்ந்ததால் சிறுத்தையை கண்டுபிடிக்கும் பணியில் கடும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், எனவே சிறுத்தையை பிடிக்கும் வரை வனத்துறையினரை பொதுமக்கள் பின் தொடர்ந்து இடையூறு செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சிறுத்தையை தேடும் பணிக்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு கேட்கவும் வனத்துறை முடிவு செய்துள்ளது. கூறைநாடு, செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு என பல இடங்களுக்கு தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருப்பது வனத்துறையினருக்கு அதனை பிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொது மக்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை பகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், 'தேர்தல் பணியை விட சிறுத்தையை பிடிப்பதே முக்கியம். ஏனென்றால் வாக்காளர்கள், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வைப்பது அரசின் கடமை' என தெரிவித்தார்.