
மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கோயில் கோபுரத்தின் மீது ஏறித்தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்த சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து ஓடத்தொடங்கிய நபர் ஒருவரை சிலர் துரத்திச் சென்றனர். அப்பொழுது கும்பகோணம் மையப் பகுதியில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் கோபுரத்தில் ஏறிய அந்த நபர் அங்கிருந்து குதித்துத்தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து அங்கு இருந்தவர்கள் உடனடியாகக் காவல்துறையினருக்கும், மீட்புப் படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் கோபுரத்தின் மேல் ஏறிய நபரை சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகு கயிறு கட்டி கீழே கொண்டு வந்தனர். விசாரணையில், மிரட்டல் விடுத்த இளைஞர் முத்துப்பேட்டையைச் சேர்ந்த சிவசங்கரன் என்று தெரியவந்தது. மது போதைக்கு அடிமையான சிவசங்கரன் மன நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், மேல் மருவத்தூர் கோவிலுக்குப் பெற்றோர்கள் அழைத்துச் சென்று விட்டுத்திரும்பி வரும்பொழுது கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்துதப்பி கோவில் கோபுரத்தில் ஏறித்தற்கொலைக்கு முயன்றார் எனத்தெரியவந்தது. இந்த சம்பவத்தால் கோவில் பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
Follow Us