Advertisment

“69% இட ஒதுக்கீட்டை செயல்படுத்த தெளிவான கொள்கையை வகுக்க வேண்டும்” - ராமதாஸ்

 clear policy should be formulated implement 69% reservation says Ramadoss

“இனிவரும் காலங்களில் 69% இட ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வழங்க வேண்டும்” என பாமக நிறுவனரும் தலைவருமான ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு காவல்துறைக்கு 621 சார் ஆய்வாளர்களை நியமிப்பதற்காக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தயாரித்து வெளியிட்ட பட்டியல் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தீர்ப்பளித்திருக்கிறது. 69% இட ஒதுக்கீட்டு விதிகள் சரியாக பின்பற்றப்படாதது தான் இதற்கு காரணம். தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்து 36 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்த புரிதல் கூட தமிழக தேர்வாணையங்களுக்கு இல்லாதது கண்டிக்கத்தக்கது.

Advertisment

தமிழ்நாடு காவல்துறைக்கு 621 சார் ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேர்வில் இடஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. அது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இடஒதுக்கீட்டை பின்பற்றுவதில் நிகழ்ந்த குளறுபடிகளை சரி செய்யும்படி ஆணையிட்டது.

அதன்படி பழைய பட்டியலில் இருந்து 41 பேரை நீக்கி விட்டு, புதிதாக 41 பேர் சேர்க்கப்பட்டதாகக் கூறி கடந்த ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி புதிய பட்டியல் ஒன்றை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதையும் ரத்து செய்திருக்கும் சென்னை உயர்நீதிமன்றம், உதவி ஆய்வாளர் தேர்வில் 69% இட ஒதுக்கீட்டை சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் செயல்படுத்திய விதம் தவறு என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. ஜம்மு - காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி பால் வசந்தகுமாரின் கண்காணிப்பில் புதிய பட்டியலைத் தயாரிக்கவும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

69% இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி பணியாளர்களைத் தேர்வு செய்யும் போது, முதலில் பொதுப்போட்டிப் பிரிவுக்கான 31% இடங்கள் தகுதி அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும். அதில் சாதி பார்க்கப்படக்கூடாது. அதன்பின், பின்னடைவுப் பணியிடங்கள் ஏதேனும் இருந்தால், அவை உரிய இட ஒதுக்கீட்டுப் பிரிவினரைக் கொண்டு நிரப்பபட வேண்டும். அதன்பிறகு தான் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான இடங்கள் உரிய வகுப்பினரைக் கொண்டு நிரப்பட வேண்டும். பொதுப்போட்டிப் பிரிவிலோ, பின்னடைவுப் பணியிடங்களிலோ, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது பட்டியனலினத்தவர் நியமிக்கப்பட்டிருந்தால், அவர்களை இட ஒதுக்கீட்டில் பயனடைந்தவர்களாக கருதக்கூடாது என்பது தான் சமூகநீதியின் அடிப்படை ஆகும்.

ஆனால், இந்த விதியைக் கூட பின்பற்றாமல் காவல்துறை தலைமை இயக்குனர் நிலையிலான அதிகாரியை தலைவராகக் கொண்ட தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், பொதுப்பிரிவிலும், பின்னடைவுப் பணியிடங்களிலும் நியமிக்கப்பட்டவர்களை இட ஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்களாக கணக்கிட்டு இருப்பது தான் சிக்கலுக்குக் காரணம் ஆகும். அதனால், இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த 50&க்கும் மேற்பட்டோருக்கு கிடைக்க வேண்டிய காவல் சார் ஆய்வாளர் பணி பறிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்த சிக்கல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் நிலையில் இதில் தமிழக அரசு எந்தத் தலையீடும் செய்யாமல், நடந்தவை அனைத்தையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. இதுவே பெரிய சமூக அநீதியாகும்.

தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர் தேர்வில் இட ஒதுக்கீட்டு விதிகள் மீறப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2020 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளுக்கு முதுநிலை ஆசிரியர்களை நியமிப்பதிலும் இதே போன்ற விதிமீறல்கள் நடந்தன. அதனால், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 83 பேரும், பட்டியலினத்தைச் சேர்ந்த 16 பேரும் ஆசிரியர்களாகும் வாய்ப்பை இழந்தனர். இதை தொடக்கத்திலேயே பாட்டாளி மக்கள் கட்சி சுட்டிக்காட்டியது. ஆசிரியர் தேர்வு வாரியத்திலும் முறையீடு செய்தது. ஆனால், எந்த பயனுமில்லை.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அமர்வும், இரட்டை நீதிபதிகள் அமர்வும் ஆசிரியர் தேர்வு வாரியம் தயாரித்த பட்டியல் செல்லாது என்று தீர்ப்பளித்ததுடன், புதிய பட்டியல் தயாரிக்கவும் ஆணையிட்டன. ஆனாலும், அதை ஏற்கான ஆசிரியர் தேர்வு வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில் 05.03.2021ஆம் நாள் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஆசிரியர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்ததுடன், பாட்டாளி மக்கள் கட்சியால் சுட்டிக்காட்டப்பட்ட வழிமுறையை பின்பற்றி புதிய தேர்ச்சிப் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்று ஆணையிட்டிருந்தது.

வி.கே. சோபனா வழக்கு என்ற அழைக்கப்படும் அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை பின்பற்றி காவல் சார் ஆய்வாளர்களை தேர்வு செய்யும்படி தான் சென்னை உயர்நீதிமன்றம் இப்போது ஆணையிட்டுள்ளது. இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் தேர்வாணையங்களும், தேர்வு வாரியங்களும் மிகவும் அலட்சியமாக செயல்படுவதையும், விதிகள மீறுவதையும் சகித்துக் கொள்ள முடியாது. இத்தகைய விதிமீறல்கள் நடைபெறும் போது, தமிழக அரசு தலையிட்டு அதை சரி செய்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யத் தவறியதன் மூலம் தமிழ்நாடு அரசு சமூகநீதியைக் காக்கும் கடமையிலிருந்து தவறி விட்டது.

இட ஒதுக்கீட்டு விதிகளை தேர்வாணையங்களே மீறும் நிகழ்வுகள் அதிகரித்துள்ள நிலையில், கடந்த காலங்களில் இட ஒதுக்கீட்டு விதிகள் முறையாக பின்பற்றப்பட்டனவா? என்ற ஐயம் எழுகிறது. அதைப் போக்கும் வகையில் கடந்த காலங்களில் 69% இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் 69% இட ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வழங்க வேண்டும். தேர்வுப் பட்டியலைத் தயார் செய்யும் பணியை கண்காணிக்க உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை அரசு நியமிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

tngovt pmk reservation Ramadoss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe