Advertisment

துப்புரவுப் பணியாளர்களுக்கு இடர்படி வழங்கக் கோரிய வழக்கு! - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

 Cleaning  Workers TN GOVT CHENNAI HIGH COURT

Advertisment

துப்புரவுப் பணியாளர்களுக்கு இடர்படி வழங்கக் கோரிய வழக்கில் பதிலளிக்க, தமிழக அரசுக்கு மார்ச் 15- ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தோழர் சட்ட மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பன்னீர்செல்வம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2014- ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த திட்டம் வரவேற்பு பெற்றபோதும், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு இடர்படிகள் வழங்குவதில்லை.

துப்புரவுத் தொழிலாளர்கள் கழிவுநீர்த் தொட்டிகளில் இறங்கி தூய்மை செய்யும் போது, மரணம் அடைய வாய்ப்பு உள்ளது. அவர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை. துப்புரவுத் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக 80 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதால், இடர்படி வழங்கக் கோரி மத்திய அரசுக்குக் கடந்த ஜனவரி மாதம் மனு அனுப்பினோம். இந்த கோரிக்கையைப் பரிசீலிக்கவும், தேவையான பாதுகாப்பு வசதிகளை வழங்கவும், தமிழக நகராட்சி நிர்வாக ஆணையருக்கு மத்திய அரசு பரிந்துரைத்தது.

Advertisment

இந்தப் பரிந்துரை மீது தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், துப்புரவுப் பணியாளர்களுக்கு இடர்படிகள் வழங்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உத்தரவிட வேண்டும்.’என மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு இடர்படி வழங்கப்படுவதாகவும், துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசுத் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கு விசாரணையை மார்ச் 15- ஆம் தேதிக்குத் தள்ளிவைத்த நீதிபதிகள், தவறினால், நீதிமன்றத்துக்கு உதவியாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனத் தெரிவித்தனர்.

tn govt chennai high court
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe