சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்புபணிகளில் ஈடுபட்டுள்ள 1813 தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு 20 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய பெட்டகம் மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/602_24.jpg)
அம்மாபேட்டை மண்டலத்தில் பணியாற்றி வரும் 200 நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கு, வேலூர் மாவட்டம் பாலார் விவசாயக் கல்லூரி சார்பில் மளிகைப் பொருள் தொகுப்பை, சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஸ் புதன்கிழமை (ஏப். 22) வழங்கினார். அப்போது அவர் கூறியது:
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களிலும் 1048 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் 1063 சுய உதவிக்குழு தூய்மைப் பணியாளர்கள் என மொத்தம் 2111 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், மாநகர் முழுவதும் சுகாதாரப்பணிகளை மேற்கொள்வதோடு, கரோனா நோய்த்தொற்று தடுப்புபணிகளிலும் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.
பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புதிட்டம், தன்னார்வலர்கள் பங்களிப்பு ஆகியவற்றின் மூலம் தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
முதல்கட்டமாக, சேலம் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியுதவிகளின் கீழ் 16.73 லட்சம் ரூபாய் மதிப்பில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டலங்களிலும் பணியாற்றி வரும் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 1063 தூய்மைப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் 20 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல், நான்கு மண்டலங்களிலும் 1048 நிரந்தரத் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் இதுவரை 750 பேருக்கு 20 வகையான மளிகைப் பொருள்கள் கொண்ட பெட்டகம் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 298 தூய்மைப் பணியாளர்களுக்கும் விரைவில் மளிகைப் பொருள் பெட்டகம் வழங்கப்படும்.
இவ்வாறு சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஸ் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif.gif)