Class 10 Public Examination Governor R.N. Congratulations Ravi

Advertisment

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது. செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொதுத் தேர்வு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையொட்டி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகரும் த.வெ.க வின் தலைவருமான விஜய் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்வு மையங்களுக்கு முன்னதாகவே அடைந்து, வினாத்தாள்களை கவனமாகப் படித்துவிட்டு, எளிதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதலில் தொடங்குங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம். பதில்கள் பெரும்பாலும் மனம் அமைதி அடையும் போது ஞாபகத்துக்கு வரும். அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நமது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.