Skip to main content

இரு கோஷ்டி மோதல்; பட்டாசால் வெடித்த பிரச்சனை

Published on 27/10/2022 | Edited on 27/10/2022

 

clash between two parties over issue bursting firecrackers Villupuram

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ளது கடவம்பாக்கம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் மனைவி 22 வயது சௌந்தர்யா. அதே பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ் என்கிற பங்காரு. கடந்த தீபாவளி அன்று சௌந்தர்யாவின் உறவினர் ஞானமணி என்பவருக்கும் சத்யராஜுக்கும் பட்டாசு வெடித்த போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் ஞானமணி தனது மனைவி சிவகாமியுடன் இருசக்கர வாகனத்தில் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தார் அப்போது அவரை வழிமறித்த சத்யராஜ், ஏன் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக ஓட்டுகிறாய் என்று கேட்டுள்ளார். என்னுடைய வண்டி. நான் எப்படி வேண்டுமானாலும் செல்வேன். அதைக் கேட்க நீ யார் என்று ஞானமணி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அன்று மாலை சௌந்தர்யா, சோமசுந்தரம், ஞானமணி, சிவகாமி ஆகியோர் வீட்டில் இருந்த போது சத்யராஜ் மற்றும் அவரது உறவினர்கள் 20க்கும் மேற்பட்டோர் சௌந்தர்யாவின் வீட்டிற்குள் நுழைந்து அவர்களை ஆபாசமாகப் பேசி மிரட்டல் விடுத்ததோடு அவர்களை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சுந்தரம் என்பவரை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்துள்ளனர். இது குறித்து சௌந்தர்யா கொடுத்த புகாரின் பேரில் சத்யராஜ், அவரது உறவினர்கள் விமல், முருகன், எழில், சந்தோஷ் மற்றும் அடையாளம் தெரிந்த 20 பேர் மீது ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

இந்த சம்பவத்தின் எதிரொலியாக ஞானமணியின் ஆதரவாளர்கள் தன்னைத் தாக்கியதாக கூறி விமல்ராஜ் அளித்த புகாரின் பேரில் ஞானமணி உட்பட அவரது உறவினர்கள் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பட்டாசு வெடித்த பிரச்சனை தற்போது இருதரப்பு மோதலாக உருவெடுத்து 43 பேர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்