Skip to main content

உருட்டுக் கட்டையுடன் கல்லூரிக்குள் நுழைந்த வடமாநில தொழிலாளர்கள்; கோவையில் பரபரப்பு

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

Clash between students and North State workers in Coimbatore

 

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களும் வடமாநிலத் தொழிலாளர்களும் தாக்கிக் கொள்ளும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் பிரபலமான தனியார் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, புதுச்சேரி, கர்நாடகா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் படித்து வருகின்றனர். அதே நேரம்,  இந்த கல்லூரியில் கேண்டீன், ஹவுஸ் கீப்பிங் உள்ளிட்ட பணிகளில் வடமாநில தொழிலாளர்களே அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு கல்லூரி வளாகத்தில் இருக்கக்கூடிய கேண்டீனில் மாணவ மாணவிகள் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது உணவு பரிமாறுவதில் மாணவர்களுக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே வடமாநில தொழிலாளர் ஒருவர் அங்கிருந்த கல்லூரி மாணவியை கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது.

 

இதனால், விரக்தியடைந்த மாணவர்கள் அந்த வடமாநில இளைஞரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது, ஒன்று சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் அந்த மாணவர்களைத் தாக்கியுள்ளனர். இதற்கு பதிலடியாக மாணவர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். ஒருகட்டத்தில் இந்த பிரச்சனை தீவிரமடையவே வடமாநில தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து உருட்டுக் கட்டைகளுடன் கேண்டினுக்குள் நுழைந்துள்ளனர்.

 

இதனால், மாணவர்களுக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் நாலாபுறமும் பதறியடித்து ஓடினர். பின்னர், இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக கல்லூரிக்கு வந்து மாணவர்களையும் - வடமாநில தொழிலாளர்களையும் சமாதானப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், வடமாநில தொழிலாளர்கள் சிலர் கல்லூரி வளாகத்திற்குள் உருட்டுக் கட்டைகளுடன் சுற்றித் திரியும் வீடியோ காட்சி தற்போது சோசியல் மீடியாவில் அதிகளவில் ஷேர் செய்யப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அறிவியல் ரீதியிலான சிறந்த பயிற்சி’ - விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Best Scientific Practice Sports Development Authority Notice

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான கோடைகால பயிற்சி முகாம் குறைந்த கட்டணத்தில் அறிவியல் ரீதியிலான சிறந்த பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒவ்வொரு வருடமும் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட விளையாட்டுகளில் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சென்னையில் அமைந்துள்ள நவீன விளையாட்டு அரங்கங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்றுநர்களைக் கொண்டு கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி முகாமில் தகுதி பெற்ற பயிற்றுநர்களைக் கொண்டு விஞ்ஞான ரீதியலான பயிற்சி (காலை, மாலை இருவேளைகளிலும்), சிற்றுண்டி, குடிநீர், பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் மற்றும் சீருடை (T-Shirt) வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மற்றும் நவீன விளையாட்டரங்கங்களில் 2013 ஆம் ஆண்டு முதல் கோடைகால பயிற்சி முகாமிற்கான பயிற்சி கட்டணம் பெறப்பட்டு வந்துள்ளது. எடுத்துக்காட்டாக 2013 ஆம் ஆண்டு டென்னிஸ் ரூ.1,500/-ம் இறகுப்பந்து ரூ. 1,000/- ம் கிரிக்கெட் ரூ.500/-ம் போல ஒவ்வொரு விளையாட்டுக்கும் வெவ்வெறு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டில் தடகளம், வாள் விளையாட்டு, கைப்பந்து, கையுந்துப்பந்து விளையாட்டுகளுக்குத் தலா 500/- ரூபாயும் கிரிக்கெட், கால்பந்து, ஜிம்நாஸ்டிக்ஸ், வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுகளுக்கு ரூ. 1000/-மும் டென்னிஸ் ரூ. 1,500/-ம் இறகுப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு ரூ. 2000/- வரை பயிற்சிக் கட்டணமாக பெறப்பட்டு வந்தது. 

Best Scientific Practice Sports Development Authority Notice

ஆனால், மாணவ மாணவியரிடையே பெருகி வரும் விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்தவும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த பயிற்றுநர்கள் காலி இடங்களில் பல்வேறு மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்ட 76 பயிற்றுநர்களின் சேவை மாணவ, மாணவியர்க்கு கிடைக்கும் வகையிலும் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு வசதிகளில் விளையாடும் வாய்ப்பை மாணவ மாணவியர்க்கு அளிக்கும் வகையிலும் இந்த ஆண்டு 29.04.2024 முதல் 13.05.2024 வரை நடைபெறவுள்ள கோடைகால பயிற்சி முகாமில், ஏற்கெனவே. வெவ்வேறு பயிற்சிக் கட்டணம் (அதாவது ரூ.200/-லிருந்து ரூ.2000/- வரை) நிர்ணயிக்கப்பட்டு இருந்ததை தற்போது முறைப்படுத்தி அனைவரும் பயன் பெறும் வகையில் சென்னையில் அனைத்து விளையாட்டுகளுக்கும் ஒரே கட்டணமாக ரூ.500, பிற மாவட்டங்களில் ரூ.200 மட்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி முகாமில் அறிவியல் ரீதியிலான பயிற்சி, விளையாட்டு சீருடை, சிற்றுண்டி, சான்றிதழ்கள் போன்றவை மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும்.

2013-ஆம் வருடம் முதல் 2019ஆம் ஆண்டு வரை (2016 ஆம் வருடம் நீங்கலாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு) மாவட்ட தலைநகரங்களுக்குச் செலவினத் தொகையாகத் தலா ரூ. 8,000/- வரை வழங்கப்பட்டு வந்தது. 2020-2022 வரை கொரோனா காலத்தில் பயிற்சி முகாம் நடைபெறவில்லை. 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோடைக்கால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடைபெற்றது. இதற்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களுக்கும் சென்னையில் உள்ள நவீன விளையாட்டரங்களுக்கும் செலவினத் தொகையாக ரூ.15,000/-ஆக உயர்த்தி வழங்கப்பட்டு அனைத்து விளையாட்டு வசதிகளுடன் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியருக்கு பயிற்சி முகாம் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. 2024 ஆம் ஆண்டும் இப்பயிற்சி முகாம் சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து மாவட்டங்களுக்கும் ரூ.15,000/- அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தாய் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த துயரம்; நொடிப் பொழுதில் நடந்த சம்பவம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Son passed away in front of mother eyes

கோவை மாவட்டம், சாய்பாபா காலனி அருகே அமைந்துள்ளது கருப்புசாமி வீதி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகன் ஆனந்த். இளைஞரான இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அதனால், மிகுந்த கவனமுடன் குடும்பத்தினர் ஆனந்தை அரவணைப்புடன் வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆனந்திற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, கடந்த 21ஆம் தேதி இரவு ஆனந்தின் தாய் லட்சுமி மற்றும் பாட்டி சியாமளா இணைந்து ஆனந்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக பேருந்துக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திற்கு அருகே சாலையின் ஓரத்தில் நடந்துச் சென்றுள்ளனர். அப்போது, ஆனந்த் தாய் மற்றும் பாட்டியின் கையை விட்டு நடந்து சென்றுள்ளார். குடும்பத்தினரும் ஆனந்த் சரியாக நடந்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் கூடவே நடந்துச் சென்ற நிலையில், திடீரென ஆனந்த் அவ்வழியே வந்த துடியலூரில் இருந்து போத்தனூர் நோக்கி சென்ற பேருந்தின் முன்பாக பாய்ந்துள்ளார்.

நொடிப் பொழிதில், ஆனந்த் பேருந்து முன் பாய தாய் மற்றும் பாட்டியின் கண் முன்னே  தனியார் பேருந்தின் முன் பகுதியில் சிக்கியுள்ளார். இதில், பேருந்தின் முன் சக்கரம் தலையில் ஏறியதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மகன் தடுமாறி விழுந்து கண்முன்னே உயிரிழந்ததைப் பார்த்த தாய்  லட்சுமி நடுரோட்டில் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் உயிரழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்து நடந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், உடல் நிலை சரியில்லாத ஆனந்தை அவரது தாய் மற்றும் பாட்டி சாலையின் ஓரத்தில் நடந்து கூட்டிச் செல்கின்றனர். அப்போது, திடீரென் அவ்வழியாக தனியார் பேருந்து வந்துள்ளது. அதில், திடீரென ஆனந்த் பாய்கிறது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், தனியார் பேருந்து ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு வண்டியை திருப்பி பிரேக் அடித்துள்ளார். ஆனாலும், யாரும் எதிர்பாராத வகையில் தனியார் பேருந்தின் முன் சக்கரம் ஏறியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்யும் நெட்டிசன்கள் மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உடல் நிலை சரியில்லாத இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து முன்பு பாய்ந்து விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாயின் கண்முன்னே விபத்தில் சிக்கி மகன் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது