Clash between rowdies; 4 arrested!

சேலம், அழகாபுரம் பெரிய புதூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (28). ரவுடி. இவரும், இவருடைய நண்பரான மிட்டாபுதூரைச் சேர்ந்த பாஸ்கர் (27) என்பவரும், ஆக. 5ம் தேதி இரவு, பெரிய புதூர் சுடுகாடு பகுதியில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். மதுபோதை அதிகமான நிலையில், அவர்களுக்குள் திடீரென்று வாய் தகராறு ஏற்பட்டது. விஜயகுமாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. இந்நிலையில், அதே பெண்ணுடன் பாஸ்கரும் ரகசியமாக தொடர்பு வைத்திருந்துள்ளார். அடிக்கடி அவருடன் செல்போனில் பேசி வந்துள்ளார்.

Advertisment

இதையறிந்த விஜயகுமார், சம்பவத்தன்று போதை தலைக்கேறிய நிலையில், தான் தொடர்பு வைத்திருக்கும் பெண்ணிடம் நீ ஏன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுகிறாய்? எனக்கேட்டு தகராறு செய்திருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை தலையில் வெட்டியுள்ளார்.

Advertisment

அந்த நேரம் பார்த்து அங்கு வந்த விஜயகுமாரின் கூட்டாளிகள் 5 பேர், பாஸ்கரை உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு கை, தலை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து விஜயகுமார், பாஸ்கர் ஆகிய இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து அழகாபுரம் காவல்நிலைய ஆய்வாளர் காந்திமதி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் பாஸ்கரின் தம்பி அஜித்குமார் (22), ஆனந்த் (29) ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாஸ்கர் தரப்பு அளித்த புகாரின் பேரில் விஜயகுமார், அவருடைய கூட்டாளி அஜீத்குமார் (26) ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

கைதான நான்கு பேரையும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம உத்தரவின் பேரில், அவர்கள் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.