Clash between BJP members at Government Hospital in Vaniyambadi

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி பகுதியில் வசித்து வருபவர் பிரதீப். இவர் பாஜக மாவட்ட இளைஞரணி துணை தலைவராக உள்ளார். இவர் பெருமாள்பேட்டை பகுதியில் லாரி சர்வீஸ் மற்றும் லாரி பாடி கட்டும் தொழில் செய்து வருகிறார். இதே போல் பெருமாள்பேட்டை பைபாஸ் சாலையில் சதீஷ் என்பவர் லாரி சர்வீஸ் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சதீஷ் உறவினரான கோபிநாத்(பாஜக பிரமுகர்) பிரதீப் கம்பெனி லாரி ஓட்டுநர் கோபாலிடம், உன்னுடைய முதலாளி லாரி பாடி சரியாக கொடுக்கின்றாரா என்று கேட்டுள்ளார். இதனை கேட்ட பிரதீப் உங்கள் தொழில் வேறு, எங்கள் ஊரில் தொழில் வேறு. ஏன் லாரி ஓட்டுநரை குழப்பம் செய்கிறீர் என்று கேட்டதால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கோபிநாத்துக்கு ஆதரவாக ரவி, சதீஷ், ஆனந்தன் உட்பட 10 பேர் நடுரோட்டில் பிரதீப் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

இதனைப் பார்த்த நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த திருப்தி மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டவர்களை விளக்கிவிட சென்ற போது பிரதீபுக்கு ஆதரவாக வந்தவர்கள் என்று நினைத்து அவர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும்அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வாணியம்பாடி நகர போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். அடிப்பட்ட மூவரும் போலீஸில் புகார் கொடுத்தனர்.

Advertisment

Clash between BJP members at Government Hospital in Vaniyambadi

அடித்தவர்கள் தங்களை போலீஸ் கைது செய்துவிடும் என பயந்து உடனே திட்டமிட்டு தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பேரும், எங்களையும் அடித்தார்கள் என சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு எல்லாம் மருத்துவமனையில் சேர்க்க முடியாது என்று மருத்துவர்கள் கூற, உடனே நாங்கள் யார்னு தெரியுமில்ல என்று மிரட்டி மருத்துவமனையில் சேர்ந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் காவல் துறையினர் முன்பாக பிரதீப்பிற்கு ஆதரவாக வந்த கோபாலகிருஷ்ணன் மீதும் சதிஷ், கோபிநாத் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளனர். போலீஸாரால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இருதரப்பு ஆட்களும் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒன்று கூடியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவு நீண்ட நேரத்துக்கு மருத்துவமனை வளாகம் பதட்டத்துடனே இருந்தது. இவர்களால் உள்நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இரவெல்லாம் என்ன நடக்குமோ என பயந்து தூங்காமல் இருந்தனர். காவல்துறையினர் சிலரை பாதுகாப்புக்கு நிறுத்திய பின்பே அவர்கள் கலைந்து சென்றனர். அதன்பின்பே மருத்துவமனை பகுதி இயல்பு நிலைக்கு வந்தது.

Advertisment

சம்பவம் குறித்து நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் போலீசார் மருத்துவமனையில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.