Clash between BJP and DMK in Trichy

பிரதமர் மோடியின் 72வது பிறந்தநாள் நாடு முழுவதும் பாஜகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சியில் பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் கொடியேற்றுவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது என கொண்டாடினர். இந்த நிலையில், திருச்சி கன்டோன்மென்ட் பாஜக சார்பில் கருமண்டபம் சக்தி நகர் பகுதியில்இன்று கொடியேற்று விழா மற்றும் கல்வெட்டு திறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக அந்த பகுதியில் கல்வெட்டு அமைக்கப்பட்டு புதிதாக கொடி கம்பம் நடப்பட்டு இருந்தது.

Advertisment

இந்த நிலையில் அந்த கொடி கம்பத்தை மர்ம ஆசாமிகள் யாரோ திடீரென்று இன்று காலை அகற்றி அங்கிருந்த கல்வெட்டை சேதப்படுத்தி உடைத்துள்ளனர். பா.ஜ.க கல்வெட்டை அகற்றிய நிலையில், திமுகவினர் திடீரென்று அங்கு வந்து அந்த இடத்தில் கொடியை நட முயற்சி செய்தனர். இந்த தகவல் பாஜகவினருக்கு தெரிய வந்தது. இதையடுத்து பாஜக கன்டோன்மென்ட் மண்டல தலைவர் பரமசிவம் தலைமையில் பாஜக தொண்டர்கள் பலர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அங்கு திமுகவினர் பலரும் ஒன்றுகூடினர். இதனால் திமுக பாஜகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Advertisment

ஒரு கட்டத்தில் பாஜக, திமுகவினர் இடையே அடிதடி ஏற்பட்டு மோதல் நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து கண்டோன்மென்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாஜக, திமுக நிர்வாகிகளை சமாதானம் செய்தனர். பிறகு இரு தரப்பு சார்பில் அந்த பகுதியில் கொடிக்கம்பம், கல்வெட்டு வைக்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து இரு கோஷ்டிகளும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் கருமண்டாம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோன்று திருச்சி மணிகண்டம் பகுதியில் பாஜக சார்பில் கொடியேற்று விழா இன்று நடப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் கொடிக்கம்பம் வைக்க அனுமதி வாங்கவில்லை என்று கூறி மணிகண்டம் போலீசார் அந்த கொடி கம்பத்தை அகற்றி விட்டனர். இதையடுத்து அங்கு பாஜக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவில் பாஜகவினர் திருச்சியில் கொடி கம்பம் கல்வெட்டு வைக்க இடையூர் ஏற்பட்ட சம்பவம் பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment