/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_869.jpg)
சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில், சார் ஆட்சியர் மதுபாலனை சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தில்படகு ஓட்டும் தொழிலாளர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் ரமேஷ்பாபு தலைமையில், அச்சங்கத்தின் தலைவர் சுந்தரமூர்த்தி, செயலாளர் ராஜா, பொருளாளர் நடராஜன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், ‘கரோனா நோய் 2-வது அலையின் காரணமாக கடந்த 2021 ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி முதல் பிச்சாவரத்தில் உள்ள அறிஞர் அண்ணா படகு ஓட்டும் தளத்தில் எந்தப் படகும் ஒடவில்லை. இந்தச் சுற்றுலாத் தளத்தில் படகு ஓட்டுவதை நம்பியே 50 குடும்பங்கள் கடந்த 35 ஆண்டுகளாகப் பிழைப்பு நடத்தி வருகிறோம். அரசின் ஊரடங்கு உத்தரவால் எங்களின் பிழைப்பு மொத்தமாகப் பாதித்துள்ளது. கடந்த ஆண்டு கரோனா நிவாரண நிதியாக 3 தவணையில் ரூ 5 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த நிவாரணம் எங்கள் பசி பட்டினியைப் போக்குவதற்கு உதவியாக இருந்தது.
தற்போது 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. நாங்கள் கமிஷன் அடிப்படையில் படகு ஓட்டுவதால் குறைந்த வருமானமே கிடைத்து வருகிறது. இப்போது ஊரடங்கு அறிவித்துவிட்டதால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதித்து வறுமையில் உள்ளோம். எனவே கரோனா காலம் முடியும் வரை மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் நிவாரணம் எங்களுக்கு வழங்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். பிழைக்க வேறு வழியில்லாத நிலையில் மாதா மாதம் தொடர்ந்து தடையில்லாமல் ரூ 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்’ என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மனுவைப் பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர் மதுபாலன் இதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)