Skip to main content

ஈழத் தமிழர்கள் குடியுரிமை; “மக்கள் கேள்வியாக மாற்றியது மஜக..” - தமிமுன் அன்சாரி   

Published on 30/08/2021 | Edited on 30/08/2021

 

Citizenship of Eelam Tamils; "MJK changed it as People question" - Tamimun Ansari

 

தமிழகத்தில் அகதிகளாக வாழும் இலங்கை ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கக் கோரி கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இது தொடர்பான காணொளி வழி கருத்தரங்குகளை இராசன் காந்தி, அருள், மோகன்தாஸ் போன்றோர்கள் முன்னெடுத்து வருகின்றனர். அதன் 34-வது அமர்வில் நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று பேசினார். 

 

அவர் பேசியதாவது; “தாய் மண்ணை துறந்து, புலம் பெயர்ந்து, இன்னொரு நாட்டில் அகதிகளாக வாழ்வது எவ்வளவு கொடுமையானது என்பதை நான் அறிவேன். வட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களும், பர்மாவின் ரோஹிங்யாக்களும் அன்று நீங்கள் அடைந்த துயரை இன்று அனுபவிக்கிறார்கள். உள்நாட்டு போர்கள், உரிமை போர்கள் காரணமாக அப்பாவி மக்கள் அகதிகளாக அடையும் துன்பங்கள் அளவிட முடியாதவை. நான் சிறுவயதிலிருந்தே  ஈழத்தமிழர்களின் போராட்டங்களை உன்னிப்பாக கவனித்து வருபவன். ஏனெனில் எனது ஊர் தோப்புத்துறை இலங்கைக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ளது. அரை மணி நேரத்தில் விரைவு படகில் இலங்கை கரைக்கு  சென்றுவிட முடியும். வேதாரண்யத்தில் யாழ்ப்பாண வீதி என ஒன்று இருக்கிறது. இலங்கையின் இயல்பான இயற்கை அமைப்பை எனது பகுதியில் பார்க்க முடியும். 

 

நான் சிறுவயது மாணவனாக இருந்தபோது ஈழ ஆதரவு நிகழ்வுகளில் பார்வையாளராக பங்கேற்றிருக்கிறேன். 1980-களின் மத்தியில் விடுதலைப் புலிகள், டெலோ, EPRLF, ப்ளாட், ஈரோஸ் என தமிழ் போராளி அமைப்புகளின்  நடமாட்டம் எங்கள் பகுதிகளில் இருந்தது. போரில் பாதிப்படைந்து படகுகளில் ஆபத்தான முறையில் உயிர் தப்பி குடும்பம், குடும்பமாக கண்ணீரோடு, பசியோடு வேதாரண்யம் வரும் அகதிகளை நான் நேரில் கண்டுள்ளேன். அவர்கள் காவல் நிலையங்களுக்கு அழைத்து வரப்பட்டு, வருகைப் பதிவு செய்யப்பட்டு பேருந்துகளில் அகதி முகாம்களுக்கு அனுப்பப்படுவர். அப்படி ஒரு முகாம் புஷ்பவனம் கிராமத்தில் அப்போது இருந்தது. ஈழப் போரை கேட்பதற்காகவே BBC வானொலியின்  தமிழோசையை கேட்பதுண்டு. இன்று 30 ஆண்டுகளை கடந்தும் இந்தியாவில் வாழும் ஈழ அகதிகளின் நிலை கேள்விக்குறியாகவே இருக்கிறது. 

 

நான் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று சென்ற போது, இலங்கையின் வடகிழக்கில் ஐ.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சட்டசபையில் பேசினேன். ஈழத் தமிழர்களின் நலனுக்காக வெளிநடப்பும் செய்துள்ளேன். 2017-ல் சென்னையில் புயல் அடித்த போது, திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதி முகாம்களுக்கு மஜக-வினருடன் சென்று நிவாரண உதவிகளை செய்திருக்கிறேன். ஈழத் தமிழர்கள் விஷயத்தில் மனிதாபிமானத்தோடு எங்கள் அணுகுமுறைகள் இருக்கிறது.

 

1983 முதல் 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 பேர் ஈழ அகதிகளாக இங்கு  வந்துள்ளனர். இவர்களில் 18 ஆயிரத்து 944 குடும்பங்களை சேர்ந்த 58 ஆயிரத்து 822 பேர் 29 மாவட்டங்களில் உள்ள 108 முகாம்களில் உள்ளனர். மேலும் 13 ஆயிரத்து 540 குடும்பங்களை சேர்ந்த 34 ஆயிரத்து 87 பேர் காவல் நிலையங்களில் பதிவு செய்து விட்டு வெளியில் தங்கியுள்ளனர் என புள்ளி விபரம் கூறுகிறது. அவர்கள் அனைவரும் பிள்ளைகள் பெற்று இரு தலைமுறைகளாக இங்கேயே வாழ்கின்றனர். அவர்களின் பேச்சு நடை, ஈழ பேச்சு நடையிலிருந்து மாறி தமிழக மக்கள் பேசும் பேச்சு நடைக்கு மாறிவிடும் அளவுக்கு இங்கு ஐக்கியமாகி விட்டார்கள். அவர்கள் சட்டம் - ஒழுங்குக்கு சேதம் ஏற்படுத்துவதில்லை. கட்டுப்பாட்டோடு வாழ்கிறார்கள். இவர்களின் உரிமைகளுக்காகவும், குடியுரிமைக்காகவும் கோரிக்கை வைத்து முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்கள் சமீபத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, 15 பேர் சிகிச்சையில்  இருப்பது வேதனை அளிக்கிறது. உயிரையே இழக்க ஒருவர் முடிவு செய்கிறார் எனில் அவரது கோரிக்கை எந்த அளவு முக்கியமானது என்பதை உணர வேண்டும்.

 

தற்போது தமிழக முதல்வர், ரூ.317 கோடியே 40 லட்சத்தில் இவர்களின் மேம்பாட்டுக்காக திட்டங்களை அறிவித்து, இனி இலங்கை அகதிகள் முகாம்கள் என்பது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் இலங்கை தமிழர்கள் அனாதைகள் அல்ல என்றும் கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக அவருக்கு நம் சார்பில் நன்றிகளை, பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

 

ஈழத் தமிழர்களில் வசதியானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும் கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் அகதிகளாக சென்றார்கள். அந்நாடுகள் குடியுரிமை வழங்கியதால், இன்று அங்கேயே வாழ்ந்து, வளர்ந்து அந்நாடுகளின் வளர்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்கள். ஆனால் ஈழத் தமிழர்களுக்கு நெருக்கமான, தந்தை நாடாக அவர்கள் கருதும் இந்தியாவில் அவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவது அநீதியாகும். சி.ஏ.ஏ. குடியுரிமை சட்டத்தில் ஆப்கான், பாகிஸ்தான், பங்ளாதேஷ் நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு குடியுரிமை கொடுப்பார்களாம். இலங்கை தமிழர்களுக்கு கொடுக்க மாட்டார்களாம். இது என்ன நியாயம்? என நான்  தொலைக்காட்சி விவாதங்களிலும், பொதுக் கூட்டங்களிலும், போராட்டங்களிலும் கேட்டேன். மனிதநேய ஜனநாயக கட்சியினர் இதை மக்கள் கேள்வியாக மாற்றினர். அந்த வகையில் மஜக உங்களோடு என்றும் துணை நிற்கும். இந்திய ஒன்றிய அரசுக்கு, பிரதமர் மோடிக்கு இதை நாம் மீண்டும், மீண்டும் கோரிக்கையாக வைக்கிறோம்” இவ்வாறு அவர் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆப்பிரிக்கா வானத்தின் நட்சத்திரம் விழுந்தது... யூசுப் அல் கர்ளாவி மரணம்” - தமிமுன் அன்சாரி 

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

Yusuf Al Garlawi tamimun ansari

 

ஆப்பிரிக்கா தந்த மேதைகளில் ஒருவரும், பன்னாட்டு அறிஞருமான யூசுப் அல்-கர்ளாவி (96) அவர்கள் இன்று மரணமடைந்தார். அவரது இழப்பு ஆழ்ந்த துயரத்தை தருகிறது என்று மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல் தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது; “ஆப்பிரிக்கா தந்த மேதைகளில் ஒருவரும், பன்னாட்டு அறிஞருமான யூசுப் அல்-கர்ளாவி (96) அவர்கள் இன்று மரணமடைந்தார் என்ற செய்தி ஆழ்ந்த துயரத்தை தருகிறது. முரண்பாடுகளில் உடன்பாடு என்ற கொள்கையுடன் கருத்து இணக்கத்தை வலியுறுத்தி அவர் எழுதிய நூல்களும், ஆற்றிய உரைகளும் காலம் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தாக்கம் உடையவை. 

 

காலத்தின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அவர் வழங்கிய மார்க்க வழிகாட்டல்களும், இறைத்தூதரின் போதனைகளின் ஊடாக அவர் சுட்டிக்காட்டிய விஷயங்களும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளையும் கடந்து மேலை நாட்டார்களையும் கவர்ந்தது. பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த சிந்தனையாளர்களும், அவர் எடுத்துரைத்த கருத்துக்களை வழி மொழிந்தனர். சமகால சிக்கல்களை எளிதாக அணுகி, பாறைகளை போல தோற்றமளித்த விவகாரங்களில், பனித்துளிகளை போல தீர்வுகளை தந்தவர் என்ற அடிப்படையில் அவரது இழப்பு ஆன்மிக உலகிற்கு பேரிழப்பாகும். 

 

நேர நிர்வாகம், நாம் பிரித்து விட வேண்டாம், முஸ்லிம்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும்.?, திருக்குர்ஆன் கூறும் பொறுமை, இளைஞர்களே... நாங்கள் உங்களிடம்  எதை எதிர்பார்க்கிறோம்.? முரண்பாடுகளில் உடன்பாடு, இஸ்லாம் நடுநிலை மார்க்கம், உள்ளிட்ட இவரது 120 நூல்களின் அணிவகுப்புகள் பிரமிப்புகளை தருபவை.

 

மாணவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய, எது முதலில்.? என்ற நூல் மிகப்பெரிய அறிவுக்கொடையாகும். 'சமூக பிரச்சினைகளை தீர்ப்பதில் ஜகாத்தின் பங்கு' என்ற இவரின் ஆய்வு கட்டுரை வறுமை ஒழிப்பை பற்றி பேசியது குறிப்பிடத்தக்கது. ஃபத்வாக்கள் மற்றும் ஆராயச்சிக்கான ஐரோப்பிய மையத்தை இயக்கியதும், அல்ஜெரியா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகளில் அறிவொளி பணிகளை நிறுவனமயப்படுத்தியதும், மார்க்க விவகாரங்களில் சீர்திருத்த அணுகுமுறைகளை மேற்கொண்டதும் இவரது ஆளுமைகளை பறைசாற்றியது. 

 

பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காகவும், சுதந்திர வாழ்வுக்காவும் அவரது இதயம் துடித்த கொண்டே இருந்தது. உலகெங்கும் பரவிய தீவிரவாதத்தையும், தீவிரவாத குழுக்களையும் கடுமையாக எதிர்த்த இவரது துணிச்சலும்  பாராட்டத்தக்கது. Other Side of news என்று உலகை உலுக்கி வரும் அல்ஜெஸீரா பன்னாட்டு ஊடகத்தை உருவாக்கியதில் இவரது பங்களிப்பு அளப்பரியதாகும். இது குரலற்ற மக்களின் குரலை ஒளிபரப்புகிறது. இதன் உருவாக்கத்தில் ஆணிவேராக திகழ்ந்த யூசுப் அல் கர்ளாவியை ஆசிய, ஆப்பிரிக்க மக்கள் நன்றியுடன் நினைவு கூறுவார்கள் என்பதில் ஐயமில்லை. 

 

தான் பிறந்த எகிப்து நாட்டில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்திட அவர் ஆற்றிய பணிகள் அவரை நாடு துறக்க செய்தது. பிறந்த மண்ணிலிருந்து அகதியாய் செல்ல வழிவகுத்தது. அவர் தொடர்ந்து கத்தாரில் முகாமிட்டு உலகெங்கும் அறிவொளியை சமரசமின்றி, இடையுறாது  பரப்பி வந்தார். அவரது காணொளிகளை வலை தளங்களில் லட்சக்கணக்காணோர் தினமும் கண்டு பயனடைகிறார்கள். மாணவர்களாக மாறி மகிழ்கிறார்கள். இன்று அவர் நம்மிடமிருந்து விடைபெற்றிருக்கிறார். 

 

ஆப்பிரிக்க வானின் நட்சத்திரம் விழுந்து விட்டது. வளைகுடாவில் ஒளி வீசிய முத்து மீண்டும் சிப்பிக்குள் சென்று விட்டது. ஓரிறை உலகம் ஒப்பற்ற மேதையை இழந்திருக்கிறது. பக்குவமும், முதிர்ச்சியும், இணக்கமான சிந்தனைகளும் நிறைந்த ஒருவரை இழந்த வருத்தம் வாட்டுகிறது. இறைவன் அவரது பிழைகளை மன்னித்து, அவரது மறு உலக வாழ்வு சிறப்புற பிரார்த்திக்கிறோம். ஆறுதலை பகிர்ந்து கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

“ஊடகவியலாளர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு குரல் கொடுப்போம்”  - மு.தமிமுன் அன்சாரி

Published on 20/09/2022 | Edited on 20/09/2022

 

“Let's give voice to the democratic rights of journalists” - M. Tamimun Ansari

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே இயங்கிவரும் சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பான செய்திகளை நமது நக்கீரனில் தொடர்ந்து விசாரணை செய்து வெளியிட்டுவருகிறோம். அந்த வகையில் நேற்று நமது முதன்மைச் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அஜித்குமார் ஆகியோரை பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் சகோதரர் அருண் சுபாஷ் உட்பட 10 பேர் வழிமறித்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கில் தற்போது 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

 

அந்த வகையில் மஜக பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான மு.தமிமுன் அன்சாரி, தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மர்ம மரணத்தின் பின், செய்திகளை புலனாய்வு செய்த 'நக்கீரன்' இதழின் மூத்த செய்தியாளர் பிரகாஷ், ஒளிப்பதிவு கலைஞர் அஜீத் குமார் ஆகியோர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மஜக வன்மையாக கண்டிக்கிறது. ஊடகவியலாளர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு குரல் கொடுப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.