Skip to main content

சீற்றத்தை பொருட்படுத்தாமல் கடற்கரையில் கூடும் பொதுமக்கள்

Published on 30/11/2024 | Edited on 30/11/2024
 Citizens gather on the beach regardless

                             கடற்கரையில் கடல் சீற்றத்தை உணராமல் கூடிய மக்கள், இடம்:கடலூர்

ஃபெஞ்சல் புயல் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஃபெஞ்சல் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (30-11-2024) காலை 08.30 புதுவையிலிருந்து சுமார் கிழக்கு-வடகிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து வடக்கு-வடகிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழக - புதுவை கடற்கரையில் காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே இன்று மாலை புயலாகக் கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70  முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 10 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.

அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கைகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் மெரினா, பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதிகளில் கடல் கொந்தளிப்பை பார்ப்பதற்கு மக்கள் குவிந்து வருகின்றனர். அதேபோல் கடலூரில் கடல் சீற்றத்தை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் கடற்கரையில் கூடியுள்ளனர். சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் புயல் கரையைக் கடக்கும்  என எதிர்பார்க்கப்படும் நிலையில் மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் படகுகளை பத்திரப்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ளனர். படகுகள் நிறுத்தப்படும் இடம்வரை கடல் சீற்றம் இருப்பதால் அதனைத் தாண்டியும் கடல் நீர் உள்ளே வரும் என அச்சத்தில் உள்ள மீனவர்கள் தங்கள் படகுகளை குடியிருப்பு பகுதிக்கு  ஒட்டிய பகுதிகளில் நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

வானிலை மையத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி  சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை அதி கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்