CISF soldier who hugged Minister Muthusamy at the airport

Advertisment

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சரும்திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டார். பின்னர், அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு, மும்பை செல்வதற்காக, பிற்பகல் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். மும்பையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, கோவையில் இருந்து அவர் விமானம் மூலம் கிளம்பினார். அப்போது, அவரை வழியனுப்ப கோவை விமான நிலையத்திற்கு வீட்டுவசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி வந்தார்.

முன்னதாக, கோவை விமான நிலையம் வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏராளமான தொண்டர்கள் உதயநிதியை காணக் குவிந்திருந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமான நிலையத்திற்குள் சென்றார். அப்போது, அவரை மட்டும் உள்ளே செல்ல மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அனுமதித்தனர். உடன் வந்த அமைச்சர் முத்துசாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகளை அனுமதிக்க முடியாது என அனுமதி மறுத்துவிட்டனர். அப்போது, அங்கு பணியில் இருந்த சிஆர்பிஎப் வீரர், அமைச்சர் முத்துசாமியை விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்காமல் அவரது நெஞ்சில் கைவைத்து தடுத்துதள்ளிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த திமுக தொண்டர்கள் ஆவேசமடைந்தனர்.

இதனால் விமான நிலையத்திற்கு வந்திருந்த திமுக தொண்டர்கள் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் அவர் அமைச்சர் எனத் தெரியவில்லை எனக் கூறியதாகத்தெரிகிறது. அப்பொழுது, அமைச்சர் யார் என்று கூடத் தெரியாமல் பாதுகாப்புப் பணிக்கு எப்படி வருகிறார்கள் எனக்கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

Advertisment

இதனைத் தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி விமான நிலையத்திற்குள் சென்று உதயநிதி ஸ்டாலினை வழி அனுப்பி வைத்துத்திரும்பினார். பின்னர், சம்பவம் குறித்தான செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் முத்துசாமி, பாதுகாப்பு கருதிதான் CISF வீரர்கள் அப்படி செய்தார்கள். இதனை பெரிதாக்க வேண்டாம். பாதுகாப்பு படையினர் சரியாக கவனிக்காமல் இருந்துவிட்டனர் எனவும் அதே சமயம் பாதுகாப்பு என்பது முக்கியம் என்பதால்தான் அதனை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார். அதே சமயம்.இதை அவர்கள் வேண்டுமென்றே செஞ்சிருந்தா எங்களது ஆக்‌ஷனும் வேறு மாதிரி இருந்திருக்கும்எனக் கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த சம்பவத்தால் கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், அமைச்சர் முத்துசாமியின் முதிர்ச்சியான பதிலால் இந்த பிரச்சனை பெரிதாகாமல் பேசித் தீர்க்கப்பட்டதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன.