
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மீன் விற்பதில் ஏற்பட்ட தகராறில் பலருக்கு அரிவாள் வெட்டு நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் அருகே உள்ள கந்தப்பக்கோட்டை பகுதிக்கு நேற்று காலை மினிவேனில் மீன்விற்க சென்றுள்ளனர். அப்பொழுது கந்தப்பகோட்டையை சேர்ந்த இரண்டு வாலிபர்களுடன் மீன் விற்க சென்ற மூவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அம்மைநாயக்கனூர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கந்தப்பகோட்டையை சேர்ந்த இரண்டு வாலிபர்களின் தரப்பு பள்ளப்பட்டியில் மீன் விற்பனை செய்தவர்களின்மினிவேனை அவர்களது ஊருக்கே சென்று இரவில் அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பள்ளப்பட்டியை சேர்ந்த மீன் விற்ற நபர்கள், அடியாட்கள் சுமார் 30 க்கும் மேற்பட்டோருடன் நள்ளிரவு ஊருக்குள் புகுந்து பட்டாக்கத்தி, உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்கள் மூலம் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் மூன்று வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டது. ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் துரத்தி துரத்தி அரிவாளால் வெட்டப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதோடு, கால்நடைகளும் தாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தகவலறிந்து போலீசார் அதிகப்படியாக அங்கு குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சினிமா பாணியில் நள்ளிரவில் ஒரு ஊரே சூறையாடப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Follow Us