Skip to main content

"சினிமா கொட்டகையில் இடைவேளை நேரத்தில் முறுக்கு விற்பார்"- நடிகர் கருணாஸ் குறித்து நண்பர்கள் நெகிழ்ச்சி! 

 

"Cinema barn sells Murukku at break time" - Friends flexibility about actor Karunas!

 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த 1975 முதல் 1980- ஆம் ஆண்டு வரை  ஒன்றாம் வகுப்பிலிருந்து முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்த மாணவ, மாணவிகளின் ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று (12/06/2022) நடந்தது.

 

சுமார் 42 ஆண்டுகளுக்கு பிறகு பழைய சிறுவயது நண்பர்களை, தோழிகளைச் சந்திக்க குடும்பத் தலைவிகளாக, விவசாயிகளாக, தொழிலதிபர்களாக, திரைத்துறை பிரபலங்களாக எனப் பல்வேறு துறைகளில் ஜொலிக்கும் 60 க்கும் மேற்பட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 42 வருடங்களுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட நண்பர்கள் பலரும், மலரும் நினைவுகளை கூறி ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். பலர் கட்டியணைத்து மகிழ்ந்தனர்.

 

அப்போது, அவர்கள் கூறியதாவது, "இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணை தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் ரொம்பவே மகிழ்வாக இருந்தார். கருணாஸ் சினிமா கொட்டகையில இடைவேளை நேரத்தில் முருக்கு விற்பார். பள்ளி தோழிகள் வந்தால் வெட்கப்பட்டு ஓரமாக போனாலும், தோழிகள் அவர்களின் பாட்டிகளிடம் சொல்லி முறுக்கு வாங்கி திண்போம்" என்றனர். இப்படி ஒவ்வொருவராக தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். 

 

நடிகர் கருணாஸ் கூறுகையில், "நமக்கு ஆயிரம் நண்பர்கள் இருந்தாலும், பள்ளி, கல்லூரி நண்பர்களைப் போல வராது. சினிமாவுக்கு எதிராக, அரசியலுக்கு எதிராக, சாதிக்கு எதிராகப் பேசிய நான் அதற்குள்ளாகப் போகும் சூழ்நிலை ஏற்பட்டது. எதையும் நானாக விரும்பி போகவில்லை. வந்ததை ஏற்றுக் கொண்டேன். வந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வாய்ப்பை உருவாக்கி கொள்ள வேண்டும்" என்றார்.

 

அப்போது ஆசிரியர்களாக இருந்து பாடத்தை மட்டுமின்றி ஒழுக்கத்தையும் கற்பித்த ஆசிரியர்கள் சுப்பிரமணியன், ராமையன், சொக்கலிங்கம் ஆகியோருக்கு மாலை, சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினர். விருந்து உபசரிப்புகளுடன் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

 

நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் கருணாஸ், "குருவிக்கரம்பை அரசு தொடக்கப் பள்ளியில் 1980- ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு படித்தேன். என் அப்பா இங்கு தான் டீக்கடை நடத்தினார். அந்த காலகட்டத்தில் எங்களுடன் படித்த மாணவ, மாணவிகள் தற்போது வேறு வேறு துறைகள், வெவ்வேறு ஊர்களில் இருக்கிறோம். நீண்ட நாட்களாகவே நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சந்திக்க வேண்டும். பள்ளிப் பருவ நினைவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டோம். 

 

எங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களை சந்தித்தோம். அவர்கள் எங்களுடைய சுட்டியான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்; மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் பள்ளியை நானும் என்னுடன் படித்த மாணவ மாணவிகளும் தத்தெடுத்து பராமரிக்க முடிவு செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார். 

 

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் கருணாஸ், "திரைப்படத்துறையில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால், அரசியலிலிருந்து ஓய்வு பெற்றதாக அர்த்தம் இல்லை. எனக்கான தொழில் சினிமாதான். அரசியல் எனக்கு தொழில் கிடையாது. எனக்கு நிறைய வாய்ப்புகள் வருவதால், தற்போது சினிமாவில் நடித்து வருகிறேன். நான் சினிமாவில் பிசியாக இருப்பதால் அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. அதனால் ஒதுங்கி இருப்பதாக தோன்றுகிறது" என்றார்.  

 

சசிகலா அ.தி.மு.க. வுக்கு வந்தால் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். கூறுகின்றனரே என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள நடிகர் கருணாஸ், "தொழிலாளியாக இருந்தவர்கள் முதலாளி ஆகிவிட்டால், மீண்டும் தொழிலாளியாக விரும்ப மாட்டார்கள். இது உலக நியதி. அப்படித்தான் தொழிலாளியாக இருந்த இ.பி.எஸ், ஓ.பி.எஸ் முதலாளியாக மாறினார்கள். எனவே ஒரு முதலாளியிடம் எப்படி தொழிலாளியாக வேலை செய்வார்கள்" என கேள்வி எழுப்பினார்.