high court chennai

Advertisment

சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட விஷ்ணு ஆலயத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஶ்ரீதரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவில் அருள்மிகு நான்மதியப் பெருமாள் கோவில் உள்ளது. இத்திருத்தலம், சோழ மன்னர்களான கேசரி வர்மா, ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் ஆட்சி காலத்தில் புகழ் பெற்று விளங்கியது.

முதல் சங்கம், பூம்புகார் அருகில் உள்ள இங்குதான் தமிழ்ப் புலவர்களால் உருவானதாக நம்பப்படுகிறது. 108 விஷ்ணு திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவிலை இந்து சமய அறநிலையத்துறை தற்போது பராமரித்து வருகிறது.

Advertisment

சிறப்புமிக்க இந்த ஆலயத்தின் கோசாலாவிற்கு மாடுகள் தானமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், உரிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால், எவரும் தானம் செய்ய முன்வருவதில்லை. பல்வேறு சமயங்களில் சிலைகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், உரிய பாதுகாப்பு இல்லாமல் ஆலயம் சிதிலமடைந்து காணப்படுகிறது.

கடந்த 2009-ம் ஆண்டு, இந்து சமய அறநிலையத்துறை, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சுமார் 4,000 ஒய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் காவலர்களைப் பணியில் ஈடுபடுத்தியிருப்பதாக அறிவித்தது. ஆனால், இந்த ஆலயத்திற்கு உரிய காவலர்கள் நியமிக்கப்படாததால் சிலைகள் திருடப்பட வாய்ப்பு உள்ளது.

அதனால், தற்போது உள்ள காவலர்கள் மற்றும் சிதிலமடைந்த கதவுகளை மாற்ற இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டுமென்றும், மேலும் ஆலயத்தின் பாதுகாப்பிற்கு ஓய்வு பெற்ற காவல்துறையைச் சேர்ந்த நபர் அல்லது ராணுவத்தைச் சேர்ந்த நபரை பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, மனு குறித்து இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 1-ம் தேதி ஒத்திவைத்தது.