Advertisment

உத்தமசோழரின் பன்னிரெண்டாவது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கிளியூரில் கண்டுபிடிப்பு..!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வட்டம் கிளியூரிலுள்ள சிவன்கோவில் கிணற்றின் அருகே சாய்த்துவைக்கப்பட்டுள்ள பலகைக்கல்லில் உத்தமசோழரின் பன்னிரெண்டாவது ஆட்சியாண்டில், அதாவது கி.பி 982 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டு இருந்திருப்பது புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தலைவர் கரு.ராஜேந்திரன் , நிறுவனர் ஆ.மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் மு.முத்துக்குமார் சிங்கப்பூர் மாணவர் அ.பிரவீன் ஆகியோரடங்கிய குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisment

chola age inscription found in puthukottai

இது குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டன் கூறியதாவது,

Advertisment

இக்கல்வெட்டு கோப்பரகேசரி என்ற பட்டமுடையசோழ மன்னர் உத்தம சோழர் (கி.பி 970 – 985 ) ஆட்சியின் பன்னிரெண்டாவது ஆண்டை சேர்ந்தது என்று பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் எழுத்தமைப்புமற்றும் ஆண்டுக் குறிப்பைக் கொண்டு கோப்பரகேசரி பட்டம் கொண்ட பராந்தகச்சோழரின் கல்வெட்டாக இருக்குமோ என்றாலும், பராந்தகசோழர் தமது மூன்றாவது ஆட்சியாண்டிலேயே மதுரை கொண்ட கோப்பரகேசரி என்ற பட்டப்பெயர் கொண்டிருப்பதையும் இப்பதம் இக்கல்வெட்டில் இல்லாததையும் கருத்திற்கொண்டு இதுபட்டமுடைய உத்தம சோழரின் காலத்தையது என்று கருத முடிகிறது.

கிளியூர்:

இவ்வூர் தென்சிறுவாயில்நாட்டுப் பிரிவில் 1000 ஆண்டுகளுக்கு முன்பும் கிளியூர் என்றே அழைக்கப்பட்டுள்ளதையும் , இப்பகுதியில் வடசிறுவாயில் நாடு போல தென்சிறுவாயில் நாடு இருந்துள்ளதை இக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.

மகாதேவர் செங்கல் தளி:

கிளியூரிலிருந்த திருக்கோயில் இறைவன் மகாதேவர் என்ற பொதுப் பெயரிலேயே இருந்துள்ளார். அடையாளம் காணப்பட்ட கல்வெட்டு தனிக்கல்லில் இருப்பதன் மூலம் இது செங்கல் (தளி) கட்டுமானமாக இருந்திருக்கும் எனக் கருதலாம். மகாதேவரின் லிங்கம் மற்றும் நந்தியையும் தவிர ஏனைய கட்டுமானங்கள் தற்போது உருவாக்கப்பட்டு வழிபாட்டிலுள்ளது..

கல்வெட்டின் அமைப்பு:

கல்வெட்டின் பெரும்பாலான எழுத்து பொறிப்புகள் கால மாற்றத்தினால் சிதைந்துள்ளன . இது நான்கரை அடி உயரம், இரண்டரை அடி அகலமுடையதாக உள்ளது. இக்கல்வெட்டில் 17 வரிகளில் கல்வெட்டுப்பொறிப்பும், அதன் கீழ் புறத்தில் சூல கோட்டுருவமும் காணப்படுகிறது.

கல்வெட்டு சொல்லும் செய்திஇம்மகாதேவர்க்கு ஒரு குறிப்பிட்ட அளவு நிலம் இறையிலியாக வரிநீக்கித்தரப்பட்டுள்ளது. இந்நில வருவாயில் நாள் தோறும் திருவமிர்து படைக்க இருநாழி அரிசி தரப்பட்டுள்ளது. இந்நிலத்திற்கான வரி நீக்கத்தினை உள்ளூர் நிர்வாகத்தினரே செய்துள்ளனர். இறையாருக்கு நிலத்தை கொடையாக கொடுத்தவர் இன்னாரென்று அறிய முடியவில்லை என்றாலும் சிறுவாயிநாட்டுபட்டன் என்பவரின் பெயர் இக்கல்வெட்டில் அறியப்படுவதால் அவரே நிலத்தை கொடுத்தவராகவோ அல்லது பெற்று இத்திருக்காரியத்தை செய்தவராக கருதலாம் .

கல்வெட்டின் மூலம் அறியப்படும் வரலாறு:

தென்சிறுவாயி நாட்டில் உத்தம சோழர் ஆட்சிக்காலத்தில் வரி நீக்கிய இறையிலி நிலம் வழங்கப்பட்டதையும் இதனை உள்ளூர் நிர்வாகத்தினர் கூடி அறிவித்தமையையும் பார்க்க முடிகிறது, இதன் மூலம் ஊர் சபைகள் கோயில் நிர்வாகத்தில் பங்காற்றியமையை புரிந்து கொள்ள முடிகிறது இந்நிலத்தின் வருவாயின் மூலம் இறைவனுக்கு தினசரி பூசைக்கு உணவு படைக்க இரு நாழி அரிசி வழங்கப்பட்டிருப்பதையும் அறிய முடிகிறது என்றார்

Chola puthukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe