Skip to main content

உச்சக்கட்ட அராஜகத்தில் அரசு பல்கலைக்கழக நிர்வாகம்... மின்சாரம் துண்டிப்பால் இருளில் மூழ்கிய மாணவியர்கள் விடுதி!

Published on 24/01/2021 | Edited on 24/01/2021
chithambaram raja muthaiya college hostel

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அரசு கல்லூரியாக தமிழக அரசு கடந்தாண்டு அறிவித்த போதிலும் இதுவரை இக்கல்லூரியில் அரசு கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. தனியார் சுயநிதி கல்லூரிகளை விட பல மடங்கு கூடுதல் விதிமுறைகளுக்கு மாறாக வசூலிக்கப்படுகிறது. அரசு மருத்துவ கல்லூரியில் இளங்கலை கல்வி கட்டணம் 13,500. இங்கு 5.5 லட்சம். முதுகலை கல்விக்கு அரசு மருத்துவ கல்லூரியில் 30 ஆயிரம். இங்கு 9.6 லட்சம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் நிதி சுமையால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கடந்த 46 நாட்களாக பல்வேறு கட்ட அறவழி நூதன போராட்டங்கள் மேற்கொண்டனர். 

 

இதற்கு அரசு தரப்பில் இருந்து எந்தவித நடவடிக்கை இல்லை என்பதால் கடந்த மூன்று தினங்களாக இரவு பகல் என தொடர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்தை நசுக்கும் விதத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் காலவரையின்றி விடுமுறை அறிவித்துள்ளது. விடுதிகளையும் காலி செய்ய உத்தரவிட்டது. இருப்பினும் போராட்டக் காலத்தில் மாணவ, மாணவிகளின் ஒற்றுமையை குலைக்க முடியாத நிர்வாகம் அவர்களின் தொடர் போராட்டத்தை நசுக்குவதற்கு பெரும்பாலான மாணவ மாணவிகள் தங்கியுள்ள விடுதிகளில் குடிநீர், உணவு வழங்குவதை நிறுத்தியது.

 

இதையடுத்து போராட்ட மாணவர்கள் சொந்த செலவில் வெளியில் இருந்து உணவை வரவழைத்து உணவருந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் செய்வதறியாத பல்கலைக்கழக நிர்வாகம், விடுதிகளுக்கான மின்சாரத்தை  துண்டித்தது. இதனால் 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ள பெண்கள் விடுதி இருளில் மூழ்கியது. மேலும் மாணவிகள் தங்களின் இயற்கை உபாதைகள், உடல்ரீதியான உபாதைகளுக்கு அடிப்படை தேவையான தண்ணீரின்றி கடும் அவதிக்கு ஆளாகி தவித்து வருகின்றனர். 

 

பல்கலைக்கழகத்தின் இந்த அராஜக போக்கை கண்டித்து மருத்துவ கல்லூரி மாணவிகள் இருள் சூழ்ந்த விடுதியில் கையில் மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிர விட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விதிமுறைகளுக்கு மாறாக கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மாணவ மாணவிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அரசு இதுகுறித்து மௌனம் காப்பது பெற்றோர்களை கவலையடைய செய்துள்ளது.

 

பல்கலைக்கழகத்தின் அராஜக போக்கை குறித்து விடுதி மாணவிகள் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உயிரற்ற சடலங்களுக்கு இவ்வளவு மதிப்பா? மாற்றி யோசித்த கேரள அரசு!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Kerala earned revenue by selling corpses

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில், பிணவறையில் கேட்பாரற்றுக் கிடந்த சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசு 3 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் கேட்பாரற்று கிடந்த சடலங்களை 2008 ஆம் ஆண்டு முதல் கேரளா அரசு விற்பனை செய்துள்ளது. மொத்தமாக 1,122 சடலங்களை தனியார் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாதிரிகளாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் மட்டும் அதிகபட்சமாக கடந்த 11 ஆண்டுகளில் கேட்பாரற்ற 599 சடலங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது.

பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு 40,000 ரூபாயும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு 20,000 ரூபாயும் என கேரள அரசு வசூலித்துள்ளது. இதில் மொத்தமாக  3.66 கோடி ரூபாய் கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பாலியல் வன்கொடுமை‌; தீட்சிதர் தலைமறைவு

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Woman molested in Chidambaram Nataraja Temple; Dikshitra disappeared

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை‌க்கு ஆளாக்கப்பட்ட நிலையில் தலைமறைவான தீட்சிதரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு கோபுர வாயிலில் இயங்கி வரும் அன்னதான கூடத்தில் சிதம்பரம் அருகே சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கவிதா(46) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் பணி செய்து வருகிறார். தெற்கு சன்னதியில் வசிக்கும், நடராஜர் கோவிலில் தீட்சிதராகப் பணியாற்றும் மணிகண்டன் என்கிற கிருஷ்ணசாமி தீட்சிதர். கவிதா தெற்கு சன்னதியில் வேலைக்கு தனியாக வரும்போது சேலையை இழுத்து அவரது மேல் சட்டை மீது கை வைத்து பாலியல் சீண்டலில் கிருஷ்ணசாமி தீட்சிதர்  ஈடுபட்டுள்ளார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த அந்தப் பெண் சிதம்பரம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கிருஷ்ணசாமி தீட்சிதரை தேடி வருகின்றனர். நடராஜர் கோவில் தீட்சிதர் வேலைக்குச் சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.