chithambaram raja muthaiya college hostel

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அரசு கல்லூரியாக தமிழக அரசு கடந்தாண்டு அறிவித்த போதிலும் இதுவரை இக்கல்லூரியில் அரசு கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. தனியார் சுயநிதி கல்லூரிகளை விட பல மடங்கு கூடுதல் விதிமுறைகளுக்கு மாறாக வசூலிக்கப்படுகிறது. அரசு மருத்துவ கல்லூரியில் இளங்கலை கல்வி கட்டணம் 13,500. இங்கு 5.5 லட்சம்.முதுகலை கல்விக்கு அரசு மருத்துவ கல்லூரியில் 30 ஆயிரம். இங்கு 9.6 லட்சம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் நிதி சுமையால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கடந்த 46 நாட்களாக பல்வேறு கட்ட அறவழி நூதன போராட்டங்கள் மேற்கொண்டனர்.

Advertisment

இதற்கு அரசு தரப்பில் இருந்து எந்தவித நடவடிக்கை இல்லை என்பதால் கடந்த மூன்று தினங்களாக இரவு பகல் என தொடர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்தை நசுக்கும் விதத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் காலவரையின்றி விடுமுறை அறிவித்துள்ளது.விடுதிகளையும் காலி செய்ய உத்தரவிட்டது. இருப்பினும் போராட்டக் காலத்தில் மாணவ, மாணவிகளின் ஒற்றுமையை குலைக்க முடியாத நிர்வாகம் அவர்களின் தொடர் போராட்டத்தை நசுக்குவதற்கு பெரும்பாலான மாணவ மாணவிகள் தங்கியுள்ள விடுதிகளில் குடிநீர், உணவு வழங்குவதை நிறுத்தியது.

Advertisment

இதையடுத்து போராட்ட மாணவர்கள் சொந்த செலவில் வெளியில் இருந்து உணவை வரவழைத்து உணவருந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் செய்வதறியாத பல்கலைக்கழக நிர்வாகம், விடுதிகளுக்கான மின்சாரத்தை துண்டித்தது. இதனால் 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ள பெண்கள் விடுதி இருளில் மூழ்கியது. மேலும் மாணவிகள் தங்களின் இயற்கை உபாதைகள், உடல்ரீதியான உபாதைகளுக்கு அடிப்படை தேவையான தண்ணீரின்றி கடும் அவதிக்கு ஆளாகி தவித்து வருகின்றனர்.

பல்கலைக்கழகத்தின் இந்த அராஜக போக்கை கண்டித்து மருத்துவ கல்லூரி மாணவிகள் இருள் சூழ்ந்த விடுதியில் கையில் மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிர விட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விதிமுறைகளுக்கு மாறாக கட்டணக் கொள்ளையில் ஈடுபடும்ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மாணவ மாணவிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அரசு இதுகுறித்து மௌனம் காப்பது பெற்றோர்களை கவலையடைய செய்துள்ளது.

Advertisment

பல்கலைக்கழகத்தின் அராஜக போக்கை குறித்து விடுதி மாணவிகள் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.