
கடலூர் - சிதம்பரம் சாலையில் சிப்காட் வளாகம் உள்ளது. இந்த சிப்காட் வளாகத்தில் குடிகாடு அருகே ‘கிரிம்சன் ஆர்கானிக் பிரைவேட் லிமிடெட்’ என்ற பூச்சிக்கொல்லி ரசாயனம் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. ஷிஃப்ட் அடிப்படையில் இந்த ஆலைக்குத் தொழிலாளர்கள் பணிக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இன்று (13.05.2021) காலை இந்த ஆலையின் இரண்டாவது தளத்தில் தொழிற்சாலையின் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் பாய்லரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவருகினறனர்.
இந்த தீ விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இரங்கல் தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் ஆலையில் கொதிகலன் வெடித்த விபத்தில், இராசாயனம் கசிந்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 4 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பது பெரும் வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கடலூர் சிப்காட் விபத்தில் 20 பேர் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தரமான மருத்துவம் அளிப்பதுடன் தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். இறந்தோர் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
கடலூர் சிப்காட் வளாகத்தில் இத்தகைய விபத்துகள் இனி நடக்காமல் தடுக்க வேண்டும். அதற்காக அங்குள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் பாதுகாப்பு ஆய்வுகளை சம்பந்தப்பட்ட தமிழக அரசு துறைகள் இணைந்து மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.