Skip to main content

வியாபாரி தற்கொலை; வெளியான அதிர்ச்சி ஆடியோ!

Published on 04/01/2023 | Edited on 04/01/2023

 

chinnasalem  shopkeeper issue whatsapp audio viral 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சேலம் - கடலூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள நயினார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (வயது 42) அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி ரம்யா மற்றும்  ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இவர் துரைசாமி என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

 

புத்தாண்டு தினத்தன்று கடை வியாபாரத்தின்போது மதிய நேரம் மனைவி மற்றும் பிள்ளைகளை கடை வியாபாரத்தை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு வீட்டுக்குச் சென்று சாப்பிட்டு வருவதாகச் சென்ற ரமேஷ், அங்கு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டுக்குச் சென்ற ரமேஷ் மீண்டும் கடைக்கு வர நீண்ட நேரம் ஆனதால் அவரது மனைவி சந்தேகம் அடைந்தார். கடையில் வேலை செய்யும் ஒருவரை அனுப்பி கணவரை அழைத்து வருமாறு கூறியுள்ளார்.  ரமேஷ் குடியிருந்த வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து ரமேஷின் சகோதரர் செந்தாமரைக்கண்ணன் கீழ்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன்., தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

இந்நிலையில் ரமேஷ் தனது செல்போனில், தான் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் என்ன என்பது குறித்து ஒரு ஆடியோ பதிவிட்டு அதை தனது நண்பர்களுக்கு அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த ஆடியோவில் பேசிய ரமேஷ் தனது மனைவியைக் குறிப்பிட்டு "எனக்கு வேறு வழி தெரியவில்லை தற்கொலை செய்து கொள்கிறேன். பிள்ளைகளைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். அந்த பொண்ணு கிட்ட 23 லட்சம் பணம் 13 பவுன் நகை இருக்கு. மேலும் நான் கடன் வாங்கியது, கொடுத்தது எல்லாம் சீட்டு எழுதி பேக்கில் வைத்துள்ளேன். நான் கடன் வாங்கியது கூட அந்தப் பெண்ணுக்காகத் தான் வேறு யாருக்காகவும் இல்லை. இப்போது பணம் கேட்க போன நேரத்தில் குழந்தைகளைச் சொல்லி மறைமுகமாக என்னை மிரட்டுகிறார். என்னுடைய தற்கொலைக்கு அவர்தான் காரணம்..." என்று அந்த ஆடியோ பேச்சு நீண்டு செல்கிறது.

 

இந்த ஆடியோ தகவல் வாட்சப் குழுக்களில் பரவி கீழ்குப்பம் போலீசாருக்கும் சென்றுள்ளது. அந்த ஆடியோவில் ரமேஷ் குறிப்பிட்டுள்ள நபர்களிடம் நடந்தது என்ன என்பது குறித்து ரகசியமான முறையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. மளிகை கடை வியாபாரி தற்கொலையில் ஒரு பெண் சம்பந்தப்பட்டு இருப்பது நயினார்பாளையம், சின்ன சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.