காரைமேட்டில் அமைந்துள்ள 18 சித்தர்கள் கோயிலான ஒளிலாயத்தில் சீன நாட்டைச் சேர்ந்த காதல் ஜோடிக்கு இந்து முறைப்படி திருமணம் நடந்துள்ளது.

நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள காரைமேடு கிராமத்தில் ஒளிலாயம் என்ற 18 சித்தர்கள் கோயில் அமைந்துள்ளது. அந்தகோயிலில் 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பசுமாடுகளை காக்கும் வகையில் கோசாலையும் அமைக்கப்பட்டுள்ளது. பௌர்ணமி தோறும் அங்கு உலக நன்மைக்காக சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடந்துவருகின்றன. இக்கோயிலின் சிறப்பை அறிந்தவர்கள் உலகின் பல்வேறு நாட்டினரும் இங்கு வந்து வழிபடுகின்றனர். அந்தவகையில் சீன காதலர்களும் வந்து திருமணம் செய்துகொண்டனர்.

Advertisment

சீனாவின் தலைநகரான பெய்ஜிங் நகரில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வரும் யன் என்பவரும், ஷாங்காய் நகரைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணரான ரூபிங் என்ற பெண்ணும், கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பப்பட்டிருக்கின்றனர். அதன்படி காரைமேடு ஒளிலாய கோயிலைத் தேர்வு செய்து, இருவரும் இங்கு வந்தனர். கோயிலில் யன்- ரூபிங் திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது. திருமணச் சடங்குகள் தொடங்கின. அதன்படி, காசி யாத்திரை நடைபெற்றது. பின்னர், நாகசுவரம், மேளக் கச்சேரி இசைக்க மணமக்கள் பட்டு வேட்டி, பட்டுப் புடவை அணிந்து மணமேடைக்கு அழைத்து வரப்பட்டு யாகங்கள் நடைபெற்றன. பின்னர் யன், ரூபிங் கழுத்தில் தாலி கட்டினார். அப்போது பலரும் அர்ச்சதை தூவி மணமக்களை வாழ்த்தினர். பின்னர் இருவீட்டார் சார்பில் மணப்பெண்ணுக்கு நெற்றி பட்டம் கட்டப்பட்டது. தொடர்ந்து அம்மி மிதித்து, அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு மணமக்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, அனைவருக்கும் அறுசுவையுடன் விருந்து பரிமாறப்பட்டது.