ட்

இலங்கை பிரதமராக ராஜபக்ச நியமனத்தை இந்திய அரசு தடுத்துநிறுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்த அவரது அறிக்கை:

Advertisment

’’இனப்படுகொலை குற்றவாளியான ராஜபக்சே இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமின்றி இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. எனவே, இந்திய அரசு இதில் தலையிட்டு ராஜபக்சவின் சட்டவிரோத நியமனத்தை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

Advertisment

2015ஆம் ஆண்டு இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட 19 ஆவது சட்டதிருத்தம் இலங்கை அதிபரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது. அதன்படி பிரதமரை நீக்குவதற்கு அதிபருக்கு அதிகாரம் கிடையாது. ஆனால், சட்டவிரோதமாக இலங்கை அதிபர் மைத்திரிபாலா பிரதமராக இருந்த ரணில் விக்கரமசிங்கேவை நீக்கிவிட்டு ராஜபக்சவை பிரதமராக நியமித்திருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற ஈழத்தமிழருக்கு எதிரான இனப்படுகொலையில் முதன்மை குற்றவாளி ராஜபக்ச ஆவார்.

ஐநா மனித உரிமை அமைப்பு இது தொடர்பாக முன்னெடுத்த விசாரணை இன்னும் நிறைவு பெறாத நிலையில் ராஜபக்சவை பிரதமராக நியமித்திருப்பது இலங்கை சட்டங்களுக்கு மட்டுமின்றி சர்வதேச நியதிகளுக்கும் எதிரானதாகும். இலங்கை அதிபர் செய்துள்ள இந்த அதிரடி மாற்றம் இந்துமாக்கடலில் மேலாதிக்கம் செய்ய முற்பட்டுள்ள சீனாவின் தூண்டுதலில் தான் நடந்திருக்கிறது என்ற யூகங்கள் எழுந்துள்ளன. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

Advertisment

ஈழத்தமிழர்களுக்கு எதிரான, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள இலங்கை அதிபரின் நடவடிக்கையை இந்திய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.’’