Advertisment

தமிழ்நாட்டுக்கு வந்த சீனாவின் கரோனா சோதனைக் கருவிகளை இந்திய அரசு தடுத்திருப்பது மனிதகுலத்திற்கு எதிரான அநீதி! பெ. மணியரசன்

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா கொடுநோயை எதிர்த்துப் போரிடுவதில் முதல் தடையாக இருப்பது, அதை உடனடியாகக் கண்டறிய முடியாத சிக்கல்தான். 14 நாட்களுக்கு மேல் பாதுகாப்பில் வைத்து ஆய்வு செய்தால்தான் கரோனா கொள்ளை நோய் இருக்கிறதா, இல்லையா எனத் தெரிந்து கொள்ளும் நிலை இருக்கிறது.

Advertisment

கரோனாவுக்கு முதலில் பலியான சீன நாடு, அந்தத் தடையை உடைக்கும் வகையில், புதுக்கருவி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. அரை மணி நேரத்தில் சோதனை செய்து கரோனா நோயா இல்லையா எனத் தெரிவிக்கக் கூடிய மிகு விரைவுக் கருவி (Rapid Testing Kit) அது.

தமிழ்நாடு அரசு சீனாவிடமிருந்து 4 இலட்சம் மிகு விரைவு சோதனைக் கருவிகளை வாங்குவதற்கு ஏற்பாடு செய்தது. அவை ஏப்ரல் 9 அன்று தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஏப்ரல் 10 அன்று முழுமையான மக்கள் பயன்பாட்டிற்கும் அவை கிடைத்திருக்க வேண்டும்.

ஆனால், இந்திய அரசு இடைமறித்து இக்கருவிகளைத் தமிழ்நாடு அரசு நேரடியாக வாங்குவதற்கு தடை விதித்துள்ள கொடிய செய்தி, குத்தீட்டியாய் நெஞ்சைத் தாக்குகிறது. இந்திய நலவாழ்வுத் துறை செயலாளர், மாநில அரசுகளின் நேரடிக் கொள்முதலுக்குத் தடை விதித்து அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

P. Maniyarasan

மனித குலத்தையே அழிக்கும் கரோனா போன்ற கொடிய நோய்த் தாக்குதல் தீவிரமாக இருக்கும் நிலையில், மக்கள் உயிர் காக்கும் போர்க் கால நடவடிக்கையாக மாநில அரசு வெளிநாடுகளிலிருந்து சிகிச்சைக் கருவிகளை வாங்குவதற்கு அதிகாரமில்லை, உரிமையில்லை என்று நடுவண் அரசு தடுத்திருப்பது மனித குலத்திற்கே எதிரான கொடிய செயலாக உள்ளது.

http://onelink.to/nknapp

தமிழ்நாடு அரசு வாங்கிய கருவிகளை இந்திய அரசு கைப்பற்றி, அதை அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள் என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மகாராட்டிரத்தை அடுத்து, இந்தியாவிலேயே மிகக்கடுமையாக கரோனா நோயால் பாதிப்பை எதிர்கொண்டுள்ள தமிழ்நாட்டுக்கு கரோனா துயர் துடைப்பு நிதியாக - வெறும் 314 கோடி ரூபாயை ஒதுக்கியும், தமிழ்நாட்டை விட குறைவான பாதிப்பை சந்தித்துள்ள இந்தி மாநிலங்களுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கியும் இந்திய அரசு இனப்பாகுபாட்டுடன் நடந்து கொண்டு வருகிறது.

இந்நிலையில், இப்போது மருத்துவத் துணைக் கருவிகளை, இந்திய அரசு தானே கொள்முதல் செய்து பகிர்ந்தளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ள செய்தி, இதிலும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படும் என்ற அச்சத்தைத் தருகிறது. தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டை இன அடிப்படையில் வஞ்சித்து வரும் இந்திய அரசு, இந்த அவசரகால சூழலிலும் இவ்வாறு செய்வது தமிழர்களின் உயிரோடு விளையாடும் மிகக்கொடிய செயலாகும்!

இந்திய மக்களைப் பாதுகாப்பதற்காக இரவும் பகலும் அயறாது பாடுபடுவதாகத் தலைமை யமைச்சர் நரேந்திர மோடி அவர்களைப் பற்றி செய்திகள் வந்து கொண்டுள்ளன. ஆனால், எவ்வளவு பெரிய மனிதப் பேரழிவு வந்தாலும், அந்த நிலையிலும் மாநில உரிமைகளைப் பறித்து டெல்லியில் அதிகாரங்களைக் குவிப்பதில்தான் முதன்மைக் கவனம் ஆட்சியாளர் களுக்கு இருக்கும் என்றால், இக்கொடுமையை என்னவென்று சொல்வது?

இந்நேரத்தில், வட அமெரிக்காவில் கலிபோர்னியா மாநில ஆளுநர் கேவின் நியூசம், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டிரம்ப் ஆட்சியின் செயலற்ற தன்மையை எதிர்த்து, தனிநாட்டுப் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். கரோனா கொள்ளை நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்கத் தேவையான மருத்துவக் கருவிகளையும், மருந்துகளையும் உடனுக்குடன் கிடைக்கச் செய்வதற்கு டிரம்ப் நிர்வாகம் ஏற்பாடு செய்யவில்லை என்று குற்றம்சாட்டி, கலிபோர்னியா இனி தனி அரசு என்றும் நேரடியாக வெளிநாடுகளிலிருந்து மருந்துகளையும், கருவிகளையும் கலிபோர்னியா இறக்குமதி செய்து கொள்ளும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

>

கரோனா கொள்ளை நோயிலிருந்து மனிதர்களைப் பாதுகாப்பது எல்லாவற்றையும் விட உடனடித் தேவையாகும். எனவே, மாநில அரசுகள் நேரடியாக மற்ற நாடுகளிலிருந்து மருந்துவக் கருவிகள் வாங்குவதற்கு விதித்திருக்கும் தடையை இந்திய அரசு முழுமையாக நீக்க வேண்டும்.

தமிழ்நாடு முதல்வர் கேட்ட 9,000 கோடி ரூபாய் கரோனா நிதியை உடனடியாக இந்திய அரசு அளிக்க வேண்டும். தமிழ்நாடு அரசும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தேவையற்ற குறுக்கீடுகளை இந்திய அரசு செய்ய வேண்டியதில்லை.

சீன நாட்டிலிருந்து தமிழ்நாடு அரசுக்கு வந்து கொண்டிருக்கும் மிகு விரைவு சோதனைக் கருவிகளைதமிழ்நாடு அரசு எடுத்துப் பயன்படுத்த வழிவிட வேண்டும். தமிழ்நாட்டுக்கு எதிராகக் கடைப்பிடிக்கும் இனப்பாகுபாட்டு அணுகுமுறையை இந்திய அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

mkstalin statement equipment testing corona virus china
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe