பலூன் விற்கச் சென்ற குழந்தைகள்; களத்தில் இறங்கிய கல்வி அதிகாரிகள்!

pdu-dropout-child
தமிழ்நாடு முழுவதும் பள்ளி செல்லாமல் உள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு மீண்டும் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போல, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் உள்ள கீரமங்கலம் வடக்கு அறிவொளி நகர் பழங்குடியின மாணவர்கள் மற்றும் அணவயல் எல்.என்.புரம் ஊராட்சி சுக்கிரன்குண்டு பகுதியில் ஏராளமான மாணவர்கள் சுமார் 50 பேர்கள் வரை பள்ளி செல்லவில்லை என்பதை அறிந்து அவர்கள் பள்ளிக்குச் சென்றுவர நடவடிக்கை எடுக்க அமைச்சர் மெய்யநாதன் கூறியதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 
தனி வாகனத்தில் அரசுப் பள்ளிக்கு மாணவர்கள் சென்றுவர நடவடிக்கை எடுக்கப்பட்டும் கீரமங்கலம் அறிவொளி நகர்ப் பகுதி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் இந்த கல்வி ஆண்டில் பள்ளிக்குச் செல்லவில்லை என்று அதிகாரிகள் தேடிப் போகும் நேரங்களில் பழங்குடியின பெற்றோர்கள் பள்ளி செல்ல வேண்டிய தங்கள் குழந்தைகளைக் கோயில் திருவிழாக்களுக்கு பலூன் வியாபாரத்திற்குச் செல்லும் தங்களுடனேயே ஊர் ஊராகக் கூட்டிச் சென்றுவிடுவதாக அறிந்தனர். 
இந்நிலையில் தான் இன்று அறிவொளி நகருக்குச் சென்ற திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் அரங்கநாதன் மற்றும் கவிதா ஆகியோர் பெற்றோர்களிடம் கல்வியின் முக்கியத்துவம், அரசின் சலுகைகள் பற்றியெல்லாம் எடுத்துக் கூறினர். அதோடு கல்வியே அழியாத செல்வம் என்று அறிவுரை கூறி பள்ளி செல்லா மாணவர்களை கீரமங்கலம் வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். மேலும் உயர்நிலைப் பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகளைச் சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பவும் கூறியுள்ளனர்.
education pudukkottai school children
இதையும் படியுங்கள்
Subscribe