ADVERTISEMENT

குட்டையில் மிதந்த குழந்தைகள்... கதறி அழுத பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள்

03:43 PM Jan 10, 2022 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது போந்தை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகள்கள் 10 வயது கலையரசி, எட்டு வயது ஹேமாவதி மற்றும் அதே ஊரைச் சேர்ந்த ரவி என்பவரது மகள் பத்து வயது சுபாஷினி ஆகிய மூவரும் அங்குள்ள அரசு பள்ளியில் 5 மற்றும் மூன்றாம் வகுப்புகள் படித்து வந்தனர். வெங்கடேசன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோனார். அதையடுத்து அவரது மனைவி திலகவதி தனது மகன்களை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று திலகவதி தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் நெல் அறுவடை பணி செய்வதற்காக சென்றிருந்தார்.

அவர்களது குழந்தைகளும் வயலுக்கு தாயுடன் சென்றிருந்தனர். அறுவடை பணி முடிந்து வீட்டுக்குத் திரும்புவதற்கு முன் கலையரசி, ஹேமாவதி இருவரும் தங்கள் வயலுக்கு அருகில் இருந்த ஒரு குட்டையில் குளிப்பதற்குச் சென்றுள்ளனர். அங்கு ஏற்கனவே அவர்களது பள்ளி தோழிகள் சுபாஷினி, சவுந்தர்யா உட்பட மூன்று சிறுமிகள் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து இவர்களும் சந்தோஷமாகக் குளித்தனர். மற்ற சிறுமிகள் குளித்து முடித்துவிட்டு வீட்டிற்குக் கிளம்பி சென்றுவிட்டனர். ஆனால் ஹேமாவதி, கலையரசி, சுபாஷினி ஆகிய மூவர் மட்டும் நீண்ட நேரம் அந்தக் குட்டையில் குளித்துக் கொண்டிருந்தனர்.

குளிக்கும் ஆர்வத்தில் குட்டையின் ஆழமான பகுதிக்குச் சென்ற மூன்று பேரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். குளிக்கச் சென்ற சிறுமிகள் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவரது பெற்றோர்கள் மூன்று பிள்ளைகளையும் தேடி அவர்கள் குளிக்கச் சென்ற குட்டைக்குச் சென்று பார்த்தபோது மூன்று சிறுமிகளும் மிதந்துள்ளனர். உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மேல்சித்தாமூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மூன்று குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கியதில் மூச்சு திணறி இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டதும் மூன்று பெண் பிள்ளைகளின் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவலறிந்த செஞ்சி போலீசார் மற்றும் டிஎஸ்பி பிரியதர்ஷினி, இன்ஸ்பெக்டர் தங்கம், சப் இன்ஸ்பெக்டர் நடராசன் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இறந்து போன மூன்று சிறுமிகளின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT