Childhood wish fulfilled at the age of 50!

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகில் உள்ள செம்படை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை(50), விவசாய வேலை செய்து வரும் இவருக்கு சங்கீதா(45) என்ற மனைவியும், வேடியப்பன்(22), மணி(20) என்ற இரு மகன்கள் உள்ளனர். பொதுவாக சிறுவயதில் தங்கள் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளை பெற்றோர்கள் தங்கள் குலதெய்வ கோயிலில் வைத்து மொட்டை அடித்து தாய் மாமன் மடியில் அமர வைத்து காதுகுத்தி கடுக்கன் போடுவார்கள். அப்போது குலதெய்வத்திற்கு கிடா வெட்டி பூஜை செய்து உறவினர்களுக்கு அமர்க்களமாக விருந்து வைப்பார்கள். அந்தவகையில், ஏழுமலை குடும்பத்தின் ஏழ்மையின் காரணமாக அவருக்கு பெற்றோர்கள் சிறுவயதில் மொட்டை அடித்து காது குத்தவில்லை. காலப்போக்கில் அவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

Advertisment

இந்நிலையில், தனது சிறுவயது ஆசையை சில தினங்களுக்கு முன்பு தனது மனைவி பிள்ளைகளிடம் ஏழுமலை கூறியுள்ளார். இதையடுத்து அவரது ஆசையை நிறைவேற்ற அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்து அவர்களது குலதெய்வ கோயிலுக்கு ஏழுமலையை அழைத்துச் சென்று மொட்டை அடித்து அவரது தாய் மாமன் மடியில் அமர வைத்து அவருக்கு காது குத்து விழா நடத்தியுள்ளனர்.

Advertisment

அப்போது ஏழுமலை தனது உறவினர்களிடம் கூறும்போது, “சிறுவயதில் மற்ற பிள்ளைகளைப் போல எனக்கும் குலதெய்வ கோயிலில் மொட்டை போட்டு காது குத்த வேண்டும் என்று ஆசை இருந்துவந்தது. தற்போது 50 வயது நெருங்கிய நிலையில் எனது பிள்ளைகள் குடும்பத்தினரிடம் அதைத் தெரிவித்தேன். அவர்கள் அந்த ஆசையை நிறைவேற்றியுள்ளனர். நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியோடு உள்ளேன்” என்று மனம் மகிழ கூறியுள்ளார்.