Skip to main content

குழந்தை திருமணங்கள்! இரண்டு தாய்மாமன்கள் மீது போக்சோ!

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

Child marriages two people under pocso act

 

சேலம் அருகே, 18 வயது நிறைவடையாத சிறுமிகளைத் திருணம் செய்துகொண்டு தாயாக்கிய அவர்களின் தாய் மாமன்கள் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து தேடிவருகின்றனர்.

 

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகே உள்ள சூரப்பள்ளியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, கர்ப்பமான நிலையில் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு நவ. 18ஆம் தேதி சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், 18 வயது பூர்த்தி அடையாத சிறுமி கர்ப்பமுற்று இருந்ததால், ஓமலூர் மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். ஆய்வாளர் இந்திரா உள்ளிட்ட காவலர்கள் அந்தச் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

 

விசாரணையில் அந்தச் சிறுமி, ''சூரப்பள்ளியில் வசிக்கும் என் தாய் மாமன் மூர்த்தி என்பவர் என்னிடம் நெருங்கிப் பழகினார். கடந்த ஜூலை மாதம் பெற்றோருக்குத் தெரியாமல் ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டோம். அதன்பின்னர் ஒன்றாக குடும்பம் நடத்தியதில் கர்ப்பம் அடைந்தேன்'' என்று கூறியுள்ளார். 

 

எனினும், 18 வயது பூர்த்தி அடையாத சிறுமியைத் திருமணம் செய்துகொள்வது சட்டப்படி குற்றம் என்பதால், அந்தச் சிறுமியின் கணவர் மூர்த்தி மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்பு சட்டமான போக்சோவின் கீழும் வழக்குப் பதிவுசெய்து, அவரை தேடிவருகின்றனர். 

 

மற்றொரு சம்பவம்: 

 

ஜலகண்டாபுரம் அருகே உள்ள சூரப்பள்ளி, பனங்காட்டூரைச் சேர்ந்த 17 வயதான பிளஸ் டூ மாணவி ஒருவர், நிறைமாத கர்ப்பிணியாக கடந்த இரு நாட்களுக்கு முன்பு மேட்டூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. அவரும் 18 வயது நிறைவடைவதற்குள் திருமணம் செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்த ஓமலூர் மகளிர் காவல் நிலைய காவல்துறையினர், இந்தச் சிறுமியின் கணவரான கமலக்கண்ணன் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

 

இந்தப் புகாரில் சிக்கியுள்ள கமலக்கண்ணன், அவருடைய மனைவிக்கு தாய்மாமன் உறவுமுறை ஆகிறது. இருவரும் காதலித்துவந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்டுள்ளனர். அதன்பிறகு சிறுமி கர்ப்பமடைந்திருப்பது தெரியவந்தது. தலைமறைவாகிவிட்ட கமலக்கண்ணனையும் காவல்துறையினர் தேடிவருகின்றனர். 

 

ஓமலூர், தாரமங்கலம், ஜலகண்டாபுரம், மேட்டூர், ஆத்தூர் சுற்றுவட்டாரங்களில் பரவலாக குழந்தைத் திருமணங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. அதேபோல்  குழந்தைகளுக்கு எதிரான குறிப்பாக, பெண் குழந்தைகள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் கணிசமாக அதிரித்துள்ளன. இதுகுறித்து அரசும், தொண்டு நிறுவனங்களும் பொதுமக்களிடமும், பள்ளிகளிலும் தொடர்ந்து விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்