Child marriage! Two youth arrested in POCSO!

தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள உப்பாரஅள்ளியைச் சேர்ந்தவர் அம்முலு (18 வயது, பெயர் மாற்றப்பட்டுள்ளது). எஸ்.எஸ்.எல்.சி படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவருடைய தந்தை, மூன்று ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து, தாயுடன் வசித்து வந்தார். கடந்த 2020ம் ஆண்டு கரோனா ஊரடங்கு காலத்தில், அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான மொட்டையன் என்பவரின் மகன் விஜய் (25), தான் அம்முலுவை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் சிறுமியின் தாயிடம் கூறியுள்ளார். அம்முலுவுக்கும் அவர் மீது காதல் இருந்துள்ளது.

Advertisment

அப்போது சிறுமியின் தாயார், மகளுக்கு தற்போது 16 வயதுதான் ஆகிறது என்றும், பதினெட்டு வயது பூர்த்தி அடைந்த பிறகு, திருமணம் பற்றி பேசிக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். இதில் திருப்தி அடையாத விஜய், 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிறுமியை ஆசை வார்த்தை கூறி, வெளியூருக்கு அழைத்துச் சென்று ரகசிய திருமணம் செய்து கொண்டார். பின்னர் திருப்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து, இருவரும் கூலிவேலை செய்து வந்தனர்.

Advertisment

இவர்கள் இருவரும் சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பினர். விஜய், உள்ளூரில் கூலி வேலைக்குச் சென்று வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது ஒருபுறம் இருக்க, அம்முலுவின் தாயாருடன் சேர்ந்து கூலி வேலை செய்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியைச் சேர்ந்த பூபதி (23) என்ற வாலிபருடன் அம்முலுவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த அறிமுகம், அவர்களுக்குள் நாளடைவில் காதலாக மலர்ந்தது.

இதையறிந்த விஜய், அப்பெண்ணை கண்டித்துள்ளார். பூபதியுடன் பழகுவதை உடனடியாக கைவிடுமாறு எச்சரித்துள்ளார். இனியும் விஜயுடன் சேர்ந்து வாழ விரும்பாத அம்முலு, அவரை பிரிந்து சென்று, பூபதியை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். ஜூலை 15ம் தேதி, உப்பாரஅள்ளிக்கு வந்த பூபதி, அம்முலுவை அழைத்துக்கொண்டு ஓசூருக்குச் சென்றார். அங்குள்ள ஒரு முருகன் கோயிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். முன்னதாக சிறுமி கழுத்தில் கிடந்த விஜய் கட்டிய தாலியை கழற்றி கோயில் உண்டியலில் போட்டுள்ளனர்.

Advertisment

இதையறிந்து அதிர்ச்சி அடைந்த விஜய், மாரண்டஅள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர், ஓசூரில் தங்கியிருந்த பூபதி மற்றும் அம்முலுவை அழைத்து விசாரித்தனர். இதில், அம்முலுவுக்கு இன்னும் 18 வயது பூர்த்தி ஆகவில்லை என்பதும், அவரிடம் காதல் வலை விரித்து பூபதியும், விஜய்யும் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. சட்டப்படி இந்த திருமணமே செல்லாது என்று எச்சரித்த காவல்துறையினர், அம்முலுவிடம் வாலிபர்கள் இருவர் மீதும் புகார் எழுதி வாங்கினர்.

அந்தப் புகாரின்பேரில், குழந்தை திருமணம் தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டம் ஆகியவற்றின் கீழ் வாலிபர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.