Child marriage; Recommendation to take action against parents ..!

Advertisment

கடலூர் மாவட்டம், அக்கடவல்லி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியும், அண்ணா கிராமம் அருகிலுள்ள வடக்கு பாளையத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனும் காதலித்துவந்துள்ளனர். இந்நிலையில் அச்சிறுமி, வீட்டைவிட்டு வெளியேறி அச்சிறுவனுடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அதனால், இருவீட்டாரும் இணைந்து அவர்களுக்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்களுடனும் நேற்று காலை 6 மணி அளவில் அக்கடவல்லி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் முடிந்துள்ளது.

இந்தத் திருமணம் குறித்து அப்பகுதியில் இருக்கும் ஒருவர், கடலூர் சைல்டு லைன் அமைப்பைச் சேர்ந்த முகுந்தன், சித்ராதேவி ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களிருவரும் பண்ருட்டி போலீசார் துணையுடன் திருமணம் நடைபெற்றதாக கூறப்பட்ட அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் 18 வயது பூர்த்தியாகாத சிறுமிக்கும் 21 வயது நிறைவடையாத சிறுவனுக்கும் திருமணம் செய்து வைத்தது சட்டப்படி குற்றமாகும் என்று கூறியதோடு இருதரப்பு பெற்றோர்களுக்கும் விளக்கமளித்தனர்.

அதனை தொடர்ந்து சிறுவன், சிறுமி மற்றும் அவரது பெற்றோரை விசாரணைக்காக சைல்டு லைன் அமைப்பினர் கடலூரில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலர் அன்பழகியிடம் அழைத்து சென்றனர். அவர்களிடம் அவர், நடத்திய விசாரணையில் திருமணம் நடத்தி வைத்தது உண்மை எனத் தெரியவந்துள்ளது.

Advertisment

அதனைத் தொடர்ந்து சிறுவர்களை சைல்டு லைன் அமைப்பினரிடம் ஒப்படைத்த சமூகநலத்துறை அதிகாரி, அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரை செய்துள்ளார்.