/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2258.jpg)
பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடைவதற்கு முன்போ, ஆணுக்கு 21 வயதுக்கு முன்போ திருமணம் செய்து வைப்பதும், செய்து கொள்வதும் குற்றச்செயல்; இக்குற்றத்திற்காக 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; குழந்தை திருமண தடை சட்டத்தின்படி, 18 வயது நிறைவடையாத சிறுமிக்கோ, 21 வயது பூர்த்தி அடையாத ஆணுக்கோ திருமணம் செய்வது குற்றமாகும். இதை மீறி, இளம் வயது திருமணம் செய்யும் நபர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
இளம் வயது திருமணத்துக்கு உடந்தையாக உள்ளோருக்கும், திருமணத்தை நடத்தி வைப்போருக்கும் இந்த சட்டத்தின் படி, 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். திருமணம் என்ற பெயரில் 18 வயது பூர்த்தி அடையாத சிறுமியுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டால், கடும் சிறை தண்டனை விதிக்கப்படும்.
சிறுமி கருவுற்றால், அந்தச் சிறுமியின் கர்ப்பப்பை மற்றும் உறுப்புகள் முழுமையாக வளர்ச்சி அடையாமல் இருக்கும். இதனால் கருச்சிதைவு, மாற்றுத்திறனாளி குழந்தைகள், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் உள்ளன. பிரசவிக்கும் சிறுமிக்கும் உயிரிழப்பு அபாயம் உள்ளது. எனவே, 18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளுக்கு திருமணம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவுக்கு 04286 233103 என்ற தொலைபேசி எண் அல்லது சைல்டு லைன் அமைப்பிற்கு 1098 என்ற கட்டணமில்லா எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம். இவ்வாறு ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)